Friday 4 March 2011

இசைக்குறிப்புகளை மொழி பெயர்த்தல்

“இசைக் குறிப்புகளை மொழி பெயர்த்தல்’’ எனும் தலைப்பைக் கொண்ட கவிதைத் தொகுப்பின் படைப்பாளி கவிஞர் வே. முத்துக்குமார்.

இவர் நெல்லை மண்ணுக்குச் சொந்தக்காரர். இவர் வடக்கு வாசல், கல்கி, மங்கையர் மலர், உயிர்மை, பரிசல், கதைமலர், உண்மை, கதை சொல்லி, சூர்யகாந்தி, விழிப்புணர்வு, குமுதம், நவீன விருட்சம், முத்துக்கமலம் மற்றும் இணைய இதழ்களான உயிரோசை, கீற்று, நட்பூ ஆகியவைகளில் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு முடிய வெளிவந்துள்ள தன் கவிதைகளை தொகுத்துத் தந்துள்ளார். இத்தொகுதியில் 86 கவிதைகள் உண்டு.

இவரது கவிதைகளை அவ்வப்போது படித்தாலும், ஒரு சேர அத்துணைக் கவிதைகளையும் வாசகர்கள் படிக்க ஒரே தொகுப்பாக தந்துள்ளது சிறப்பு. 86ல் 26 கவிதைகளுக்குத் தலைப்புகளே தரப்படவில்லை. தலைப்பற்ற கவிதைகள் மனங்களை வருடிச் செல்லும், படிக்கும் வேளையில்.




“உயிர்மை’’ இதழில் வெளியான கவிதையே (பக் 86) முத்துக்குமாருக்கு 61 வரிகள், 4 பக்கம் (பக். 24-27) கவிதை மற்றும் நாலே வரிகளிலும் (பக் 50) கவிதைகளை படைக்கத் தெரியும் என்பதை நிதர்சனமாக்கி உள்ளன.


அம்மா, உறவுகள், கடவுள், பூர்வீக வீடு, பணம் இவையெல்லாம் தனிப்பட்ட மனித வெளிப்பாடுகளாகும். இவை சம்பந்தமான கவிதைகளை வாசிப்பவன் தன்னில் கடந்த, நிகழ்கால நிகழ்வுகளைப் பின்னோக்கி செல்ல வைக்கின்றன.


தொகுதியின் துவக்கத்திலேயே கவிஞர் முத்துக்குமார் கட்டியங்கூறி விடுகிறார் (பக் 3-4). வாசிப்பை நேசிப்பவர்கள் கவிஞரின் தன்னிலை விளக்கத்தைப் படித்தபின், கவிதைகளை வாசிக்க வேண்டும்.


தன் வாழ்வில் தனக்கு மட்டுமே வாய்த்த சில அபூர்வத் தருணங்களைத் தாமிர பரணியின் நதி நீராய் உள்ளங்கையில் தேக்கி தன் சக மனிதனுக்கு மாற்றுகிறார் என பதிப்பாளரின் கூற்று அருமையான வாசகமாகும்.


நல்ல இக்கவிதைத் தொகுப்பை வழமையான நேர்த்தி, கவனிப்புகளோடு சிறந்த வகையில் வெளியிட்டுள்ள ‘வம்சி புக்ஸ்’ பதிப்பகத்துக்குப் பாராட்டுகள். கவிதைகளை நேசிக்கும் மனம் படைத்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு.


இசைக்குறிப்புகளை மொழி பெயர்த்தல் (கவிதைகள்)வே.முத்துக்குமார்வெளியீடு: வம்சி புக்ஸ்19 டி.எம். சாரோன், திருவண்ணாமலை.செல்: 9444867023விலை ரூ.90/-


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - பிப்ரவரி 2011

No comments:

Post a Comment