Sunday 6 March 2011

வெற்றி யாருக்கு ?


கமலக்கண்ணன் அவர் பிறந்த கிராமத்தின் முதல் பட்டதாரி . எழுத்தராக பணியில் சேர்ந்து கண்காணிப்பாளராக உயர்ந்தவர் . அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் இலஞ்சம் பெறாதவர் . கண்டிப்பானவர்.

அவர் பெறுகிற ஊதியம் தான் மனைவி லட்சுமி , மகன் ராகேஷ் , மகள் ரம்யா என நால்வரையும் காப்பாற்றுகிறது .

வெற்றி பெறும் ஒரு ஆணின் பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கு அவர் மனைவி நல்ல உதாரணம் .

கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் வருடத்தில் மகனும் , உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் மகளும் படித்து வருகின்றனர்.

குடும்பப் பாரம்பரியம் , கெளரவம் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தவர் கமலக்கண்ணன் தம்பதியர்.

'லட்சுமி ... லட்சுமி ... !' கணவனின் குரல் கேட்டு கூடத்துக்கு வந்தாள் மனைவி .

ராகேஷ் பத்தி பிரின்சிபல் என்னிடம் ஏதோ சொல்லணுமாம். வந்து நேரில் பார்க்க சொல்லி கடிதம் வந்திருக்கு .

படிப்பு இந்த வருடம் கடைசி இல்லையா ? ஏதாச்சும் சொல்லணும்னு அவருக்குத் தோணியிருக்கலாம் . ஆபீஸ் போறதுக்கு முன்னாடி போய் பார்த்துட்டுத் தான் போங்களேன் ..

தொலைபேசியில் அலுவலகத்துக்குத் தாமதமாக வர அனுமதி சொன்னார்.

'வாங்க ... கமலக்கண்ணன் ! உங்க பையன் ராகேஷ் கல்லூரிக்கு வந்து இருபது நாட்களுக்கு மேலாகிறது . இதோ வருகைப் பதிவேட்டைப் பாருங்க ... அவன் கவனமெல்லாம் வேறு பாதையில் போகிறது என் நினைக்கிறேன் . கூப்பிட்டு நேரில் கேட்டால் பல்வேறு காரணங்கள் . எதுவுமே நிஜமாக எனக்குத் தெரியவில்லை . பைனல் இயர் ... அதான் ... கவனியுங்க ! '

' நன்றி ஐயா ... அவசியம் கவனம் செலுத்துவேன். '

அலுவலகப் பணிகளில் அவரது நாட்டம் செல்லவில்லை . விடுப்புப் போட்டு விட்டு வீட்டில் போய் சும்மா இருக்கவும் அவர் மனது இடம் தரவில்லை . கல்லூரிக்கு போகும் பையனின் விருப்பம் என்னவாக இருக்கும் ? யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிஞ்சியது .

வீடு சென்றவர் பணிமுடித்து பையனின் வருகைக்காக கூடத்திலே அமர்ந்திருந்தார்.

ராகேஷ் வந்தான்.

' என்ன ராகேஷ் ? நான் கேள்விப்படதெல்லாம் நிஜமா ? இருபது நாளா நீ காலேஜுக்குப் போகவில்லையாமே ? எங்க போற ? என்ன செய்யறே ?'

'யாராவது எதையாவது சொன்னதாலே என்னை நீங்க நிக்க வெச்சு விசாரணை நடத்துறீங்க ! உங்களுக்கு நான் பட்டதாரியா வரணும் . அது நடக்கும் . சும்மா கவலைப்படாதீங்கப்பா !'

ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள பார்த்தார் . இயலவில்லை . மீண்டும் ஏதோ சொல்ல முயன்றான் ராகேஷ் . எழுந்தார் . அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்.

' அப்பா ... ! என்ற அலறல் கேட்ட லட்சுமி கூடத்துக்கு வந்தாள்.

' ஏங்க ? பையனை அடிக்கிறீங்க ?

' ராகேஷ் உன் அறைக்குப் போ ... ' எனச் சொல்லி விட்டு கணவன் பக்கத்தில் வந்தாள் .

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கைநீட்டி அடிப்பது சரியல்ல என் இங்கிதமாகச் சொன்னாள்.

'அவன்... என்ன பேசுறான் தெரியுமா ? பிரின்சிபாலின் வார்த்தைகள் கேட்டு இவனை விசாரித்தால் , திமிரா பதில் சொல்றான் !

லட்சுமி மெளனமானாள் .

விடிந்தது . ராகேஷ் அறைக் கதவு திறந்து கிடந்தது . படுக்கை காலியாக இருந்தது . மேசையின் மீது ஒரு கடிதம் . எடுத்தார் ... படித்தார் ...

' நான் வெளியேறுகிறேன் . என் வழியில் யார் குறுக்கிட்டாலும் எனக்குப் பிடிக்காது . தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் . ஆனால் வாழ்ந்து காட்டுவேன் . தேட வேண்டாம் ... இப்படிக்கு ராகேஷ்.'

***

மகனின் வெற்றிடம் லட்சுமியை படுக்கையில் போட்டு விட்டது . பரிசோதித்த மருத்துவர்கள் பக்கவாதம் எனச் சொல்லி மாத்திரைகள், கை, கால்களில் தேய்க்கத் தைலங்கள் என எழுதினார்கள் .

அவருக்கு மட்டும் அந்தக் கவலை இல்லையா ? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார் . வீட்டு வேலைக்கெனத் தனி ஆள் போடப்பட்டது . ரம்யா தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்று வந்தாள் .

பணிமுடித்து வீடு வந்ததும் மனைவியின் அருகில் அமர்ந்து பேசுவார் கமலக்கண்ணன் . மகனைப் பற்றியே தான் உரையாடல் இருக்கும் . சமாதானம் சொல்வார் .

' நேர்மையும் , கண்டிப்பும் இக்காலத்துப் பிள்ளைகளுக்குக் கசக்கின்றன . அவன் திருந்தி வருவானா ? இல்லை ...'

எட்டு நாள்களுக்குப் பின் லட்சுமியின் உயிர் மருத்துவமனையிலேயே பிரிந்தது . மகள் ரம்யாவுக்கு ஆறுதல் சொல்ல அவரால் இயலவில்லை . அவளுக்கு அம்மா தான் எல்லாம் .

வேகமாகச் சடங்குகளும் முடிந்து விட்டன . மகனின் வருகை பற்றி எதிர்பார்த்த உறவும் , சுற்றமும் கமலக்கண்ணனையே கொள்ளி போட வைத்தது .

இருபது நாளைக்குப் பின் அடுத்த வீடு திரும்பியது . பிளஸ் டூ படிக்கும் ரம்யா பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று வந்தாள்.

நாற்பது வருடத் தாம்பத்யம் . விரைவாகப் பெற்று வளர்ந்த பிள்ளைகள் . தற்போதைய மனைவியின் வெற்றிடம் , கமலக்கண்ணன் முடங்கிப் போனார் .

இப்போதெல்லாம் அவருக்கு இரவில் தூக்கமில்லை ! ரத்தக் கொதிப்பும் , சர்க்கரை நோயும் அவரைப் பங்கு போட்டன . மருத்துவர் தந்த மாத்திரைப் பட்டியல் , ரத்தப் பரிசோதனை எனப் பற்பல சோதனைச் சீட்டுகள் கோப்பாக உருவெடுத்தன . இரவில் மாத்திரை போட்டால் தான் தூக்கம் வரும் நிலைக்கு வந்து விட்டார் அவர்.

கைவசம் நிறைய மாத்திரைகள் , மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் .

***

கதவு தட்டப்படும் ஓசை . இரவு நேரத்தில் யார் தட்டுவது ? எழுந்து திறந்தார்.

முகம் நிறைய தாடியுடன் , ஜீன்ஸ் , டீ சர்ட் சகிதம் ஓடின . அவனுடன் நான்கு பேர் . அவர்களும் அதே போலத் தான் .

' என்னைத் தெரியலியா அரைகுறை அப்பா !' ராகேஷ் தான் , குரல் அடையாளம் காட்டியது .'

'அப்பா ... ! அம்மா ... தங்கையெல்லாம் எங்கே ?' குரல் கேட்டு ரம்யா தேம்பி தேம்பி வந்தாள் .

' அண்ணா ... அம்மா செத்துட்டாங்க ... ' என்றதும் ராகேஷின் கண்களில் நீர் தளும்பின .

' இவர்கள் என் நண்பர்கள் . நாங்க ஒரு புராஜெக்ட்டுக்காக வந்திருக்கோம் . இங்கே தான் அது நடக்கப் போகிறது . உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோணிச்சி .. அதான் வந்தேன் .'

இந்தியில் அவர்களிடம் ராகேஷ் ஏதோ சொன்னான் . கமலக்கண்ணனுக்கு புரியவில்லை . தளர்ந்து போன அவருக்கு எல்லாமே புதிராகவே தெரிந்தன .

அனைவரும் ராகேஷ் காண்பித்த அறைக்குச் சென்றனர் . அனைவரும் இரவு முழுவதுமாக நிறைய பேச்சுகள். வரைபடம் வைத்தும் தீவிரமாகப் பேசிக் கொண்டனர் . இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறிக் கேட்டது . காலை , மதியம் , இரவு அவர்களுக்கு எல்லாமே உணவு விடுதியிலிருந்து வாங்கி வந்து தந்தான் ராகேஷ் .சன்னல் வழியாக கவனித்த கமலக்கண்ணன் மனத்தில் பிரின்சிபாலின் சொற்கள் திரைப்படம் போல odina .

முடிவுக்கு வந்தார் . ஏதோ தவறான ஒன்று நடக்கத் திட்டமிடப்படுகிறது . இதைத் தடுக்க என்ன செய்யலாம் ? நாளை இரவு தான் செயல்படுத்தப் போவதாக அவர் காதில் விழுந்தன அரைகுறை வார்த்தைகள் .

***
விடிந்தது. சுறுசுறுப்பானார் . அறைக்குச் சென்று தன்னிடமுள்ள மாத்திரைகளில் தூக்க மாத்திரைகளை மட்டும் எண்ணினார் . பால்காரனிடம் ஒன்றரை விட்டர் பால் வாங்கினார் . ரம்யாவிடம் அஞ்சறை பெட்டியிலிருக்கும் கசகசாவை அள்ளி மைப் போல அரைக்கச் சொன்னார் .

' ராகேஷ் ... உனக்கும் நண்பர்களுக்கும் நான் இன்றிரவு பால் தரப்போகிறேன் . அவசியம் அவர்களும் , நீயும் சாப்பிட வேண்டும் .. '

'சரிப்பா...' ஐந்து டம்ளர்களில் முப்பது தூக்க மாத்திரைகளையும் , கசகசா விழுதையும் சரி பங்காகக் கலந்தார் . மகனின் அறைக்குச் சென்று எல்லோரிடமும் டம்ளர்களைத் தந்தார் . பால் டம்ளர்கள் கை மாறின . நிம்மதியாகப் படுக்கச் சென்றார் கமலக்கண்ணன் .

***
வீட்டுக்கு அருகிலுள்ள ஆற்றுப் பாலத்தின் மீது அதிவேக ரயில் தடதடத்துச் சென்ற ஒலி கேட்டு விழித்தார் . மகனின் அறைப்பக்கம் பார்த்தார். எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர் . ரயில் பாலத்தைத் தகர்க்க இருந்த தீவிரவாதியாக மாறிவிட்ட மகனையும் , இதர தீவிரவாதிகளையும் ஜெயித்து விட்டார் அவர் .

அடுத்தநாள் . செய்தித்தாள்களில் தலைப்பு செய்திகள் . நிகழவிருந்த ரயில் பாலம் தகர்ப்பு , பல பயணிகளின் சாவுகளைத் தடுத்த பெருமை கமலக்கண்னையையே சாரும் .

நன்றி : புதுகைத் தென்றல் - மே 2008

No comments:

Post a Comment