Monday, 28 March 2011

இனப்படுகொலையின் ஆதாரங்களை முகத்தில் அறையும் ஆவணம்...


ஈழத் தமிழர்கள் படுகின்ற அல்லல், அவலங்களை நிழற்படங்கள் மூலம் உலகின் கவனத்தைக்கு கொண்டு வரும் ஆவணப் புத்தகம் தான் என்ன செய்யலாம் இதற்காக?


சனவரி 2011 இறுதியில் கைவரப் பெற்ற இப்புத்தகம் வாசிக்கும் யாரையும் கலவரப் படுத்தும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தக ஆசிரியர் ஜெ.பிரபாகரன் மேற்கொண்டுள்ள கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்புத்தகம் ஈழத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் ஆவணப்படுத்துகின்றன.


 நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், அமெரிக்க மருத்துவர் எலன் சாண்டர் எம்.டி., இலங்கை ஜெயசூர்யா, ஜெர்மனி பெரிமன் சர்வதேச மனித உரிமைகள் கழகத்தைச் சார்ந்த விராஜ் மென்டில் ஆகியோர் அணிந்துரைகள் வழங்கியுள்ளனர்.20ஆம் பக்கத்திலிருந்து 174 பக்கங்கள் வரை வண்ணப் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது, கிஃபி (KFIR) விமானத் தாக்குதல்கள் (Shell Attack) எறிகணைத் தாக்குதல்கள், வலையத்தாக்குதல் முள்ளிவாய்க்கால், பொக்கணை, வட்டக்கச்சி தர்மபுரம், புதுக்குடியிருப்பு, வன்னிப் பகுதி, முல்லைத் தீவு ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.


8.1.2011 அன்று மன்னார் மறை மாவட்ட திருச்சபையின் கத்தோலிலிக்க பங்குத் தந்தை மற்றும் இரு பாதிரியார்கள் The Lessons Learnt and Reconciliation Commission போரின் அவலங்களை ஆதாரங்களுடன், ஆலோசனைகளையும் இணைத்து பத்து பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.


இணையத்தில் இவ்வறிக்கையை முழுமையாக பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.ஈழம் குறித்து உலகப் பிரமுகர்களின் கருத்துக்கள் (பக்.175); தமிழினப் படுகொலைகள் (பக்.176-216); 1956 ஆம் ஆண்டு முதல் 2009 வரை காலத்தில் நடத்தப் பெற்ற பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்களின் பட்டியல் (பக்.207); ஈழத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் (பக்.211); கி.மு. 500 லிருந்து கி.பி. 1948 வரையிலான இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீகம் (பக்.212) என அட்டவணைகளாகத் தரப்பட்டுள்ளன.


இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக அல்ல இன அழிப்புக் குற்றம் சாட்டி உலகறியச் செய்ய வேண்டும். போர்குற்றவாளி என்றால் தப்பித்துக் கொள்ள வழிகள் பல உண்டு. யூத இனப்படுகொலை, செர்பேனிக்கா படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை, குர்தீஷ் (ஈராக்) இனப்படுகொலை, என அணிவகுத்து வருகின்ற கொலைகளை விட ஈழத்தமிழினப் படுகொலை உலக அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும். அத்தாக்கத்தினை முன்வைக்கும் இந்த ஆவணம் வரலாற்றில் இடம் பெறும். சர்வதேச நீதிமன்றத்தில் இந்த ஆவணம் ஆதாரப்பூர்வமான மறுக்க இயலாத ஒன்றாகவும் திகழும்.


என்ன செய்யலாம் இதற்காக?
ஆசிரியர்: ஜெ.பிரபாகரன்
வெளியீடு:பென்னி குயிக் பதிப்பகம்
4/1411 செந்தில் நாதன் தெரு
தாசில்தார் நகர்
மதுரை-625020.
பக்கங்கள்: 216, விலை ரூ.500/- .


 குரு . ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - மார்ச் 2011

No comments:

Post a Comment