Sunday 20 February 2011

சிற்றிதழ்



தமிழ் எழுத்துலகில் சிற்றிதழ்கள் வரவும் , வாசிப்பும் அபரிதமானது . சிற்றிதழ்களில் படைப்பாளர்களின் பங்கும் அளப்பரியது . அவர்களின் அறம் சார்ந்த , ஆய்வு நோக்கில் மொழி வளம் பற்றிய கட்டுரைகள் சுதந்திரமாக வெளிவருகின்றன . சிற்றிதழ்களின் ஆசிரியப் பெருமக்களின் துணிந்த முடிவுகள் தான் இவைகளுக்குத் தளங்கள் அமைத்துத் தருகின்றன எனலாம் . மேலும் இதற்கென தீவிர வாசகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றனர் . அவர்களின் நல் ஆதரவு சிற்றிதழ்களின் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன .


'கடவுள் அதிகாரமும் வல்லமையும் கொண்டவர்களை விட தன் படைப்புகளிலேயே எளிமையானவற்றோடு தான் அதிகம் காணப்படுகிறார் என்பதை நான் அறிவேன் . அதனால் தான் எளியவனாக இருக்கப் போராடிக் கொண்டிருக்கின்றேன் . எளியவர்களுக்குச் சேவை செய்யாமல் என்னால் அந்த நிலையை அடைய முடியாது . ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றுவதில் எனக்குப் பெரும் விருப்பம் இருக்க இதுதான் காரணம் . அரசியலுக்கு வராமல் அவர்களுக்கு நான் பணியாற்ற முடியாது 'இச்செய்தியை காந்தி தனது ஆங்கில வாரச் சிற்றிதழான ' யங் இந்தியா ' வில் தனது அரசியல் வாழ்க்கைக்கான காரணத்தை இந்திய இளைஞர்களுக்குச் செய்தியாக விடுத்தார் . இச்சிற்றிதழின் தாக்கம் இந்திய விடுதலைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது ( 1924 )



தமிழில் சிற்றிதழ்களில் மைல் கல்களாக நினைவு கூறப்படுவது அமரர் சி.சு.செல்லப்பாவின் ' எழுத்து ' , அமரர் வ.ரா, புதுமைப்பித்தன் , சிதம்பர ரகுநாதன் , ந.பிச்சமூர்த்தி ஆகியோர் நடத்திய ' மணிக்கொடி ' , திரு.விஜயபாஸ்கரனின் ' சரஸ்வதி ' ஆகியவை அடங்கும் . புதுக்கவிதை , கட்டுரை , சிறுகதை என ஒளிர்ந்தவை ஏராளம் . இவை வலம் வந்த வருடங்கள் 7 முதல் 12 வரை என இதழ் ஆய்வர்கள் கூறுவதுண்டு .

அதே போல மகாகவி பாரதி நடத்திய ' இந்தியா ' , பாரதிதாசன் நடத்திய ' குயில் ' எனும் சிற்றிதழ்களின் தாக்கத்தை இதழ்களின் முன்னோடிகள் சொல்கின்றனர்.

தமிழ்நாட்டில் வெளியான சிற்றிதழ்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது . சிற்றிதழாக உருப்பெற்று நீட்சியாக வெகுஜன இலக்கியமாக மாறியதாக சமீபத்தில் கவிப்பேரரசு வார இதழ் பேட்டியில் சொல்லியிருக்கிறார் . சிலவற்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் .

' சிற்றிதழ் என்பது தலைக்காவிரி மாதிரி . அங்கிருந்து தான் வெகுஜன இலக்கியம் தொடங்குகிறது . தலைக்காவிரி தொடங்குகிற இடத்தில் ஒரு ஆடு தாண்டிக் குதித்துவிடும் என்பார்கள் . இதுதான் பிரவாகம் எடுத்து கரைகளை ஊடறுத்துக் கொண்டு அருவிகளாய் , வெள்ளமாய் ,வயல் வெளிகளில் பாய்கிற ஒரு நதியாக வருகிரது . அதனால் தலைக்காவிரியில் எப்படி ஊற்று சிறிய அளவில் தொடங்கி பெரிய வெள்ளமாய்ப் பாய்கிறதோ அதே போல் தான் வெகுஜன இலக்கியம் கூட சிற்றிலக்கியம் என்ற தலைகாவிரியில் தான் தொடங்குகிறது '.

இன்றைய சூழலில் வெளிவருகின்ற சிற்றிதழ்கள் சிலவற்றைப் பார்ப்போம் . சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ' புதுகைத் தென்றல் ' ஏழாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது .




இவ்விதழ்களின் மூத்த படைப்பாளர்கள் , முன்னணி எழுத்தாளர்கள் , கவிஞர்கள் மற்றும் வளரும் தலைமுறையின் இளம் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும் . இவர்களால் சங்கத்தமிழ் இலக்கியம் , பெண்ணியச் சிறப்பு , தமிழில் கலைச் சொற்கள் , தேசீய தலைவர்களைப் பற்றிய சிறப்புகள் என வாசகர்களின் தேடல்களுக்குச் சரியான விடைகளைத் தருகின்றன . இதழாசிரியர் புதுகை.மு.தருமராசன் தமிழ்ப்பற்றாளர் . அவரது சீரிய கண்காணிப்பில் இவ்விதழ் வெளிவருகிறது .

அடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து வெளிவரும் ' இலக்கியச் சிறகு ' . இவ்விதழ் எண் வழிச்சுற்று சிற்றிதழாகும் . சற்றொப்ப 10 வருடங்களாக வெளிவருகிறது . இதழாசிரியர் திரு.மு.இராமலிங்கம் தமிழ்ப் பற்றாளர் . இவரே ' Shine ' என்னும் ஆங்கில சிற்றிதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார் . இந்த ஆங்கிலச் சிற்றிதழையும் 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் . இவ்விரண்டு சிற்றிதழ்களுக்கு நிறைய வாசகர்கள் உண்டு . விளம்பரங்கள் கிடையாது . இருப்பினும் சிற்றிதழ்களுக்கும் பல சிரமங்களை இதழாசிரியர் ஏற்றாலும் தொடர்ச்சியாக நடத்தி வருவது பாராட்டப்பட வேண்டிய நற்செயலாகும் . திருவாளார்கள் வே.சபாநாயகம் , காதம்பரி , எஸ்ஸார்சி , பாவலர் எழுஞாயிறு , சுப்ரபாரதிமணியன் , இளசை அருணா, தீபம் எஸ்.திருமலை , வளவ.துரையன் , குரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் சீர்மிகு படைப்புகளால் இலக்கியச்சிறகு இதழுக்கு வளம் சேர்க்கின்றனர்.

புதுவையில் வாழ்ந்து வரும் , நாட்டுப்புற இயலின் பிதாமகர் அறிஞர் கி.ராஜநாராயணன் நடத்தும் ' கதை சொல்லி ' சிற்றிதழைக் குறிப்பிட வேண்டும் . இதழின் பொறுப்பை கவிஞர் கழனியூரனிடம் ஒப்படைத்து விட்டார்.பின் , தற்போது சென்னை வழக்கறிஞர் திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தி வருகிறார் . இந்த இதழும் 2 ஆண்டுகளாக வெளிவருகிறது . நாட்டுப்புறக்கதைகள் , பாரம்பரிய பழக்க வழக்கங்கள் , மறைந்து போன தமிழர்களின் சொல்லாடல்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சிற்றிதழ் ' கதை சொல்லி '.


இந்தியத் தலைநரிலிருந்து தமிழ் மாதச் சிற்றிதழ் ' வடக்கு வாசல் ' . நான்கு ஆண்டுகளை முடித்து ஐந்தாம் ஆண்டுக்குள் நுழையும் சிற்றிதழ் இது . தமிழகப் படைப்பாளர்கள் , கவிஞர்கள் பங்கேற்று சிறப்பித்து வரும் இதழாகும் , நடுவணரசு செயலகத்தில் மேல்நிலை அலுவலராகப் பணியாற்றி , விருப்ப ஒய்வு பெற்ற திரு.கி.பென்னேஸ்வரன் தான் நிறுவனர் மற்றும் ஆசிரியராக இருக்கிறார் . கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் . பிள்ளைகளின் கல்வி , அரசுப்பணி நிமித்தம் டெல்லி வாழ் தமிழராகிப் போனவர் . ' யதார்த்தா ' எனும் நாடக குழுவை நிறுவி டெல்லித் தமிழர்களுக்கு பல நாடகங்களைத் தந்தவர் . தமிழ்ப் பற்றாளர் . பென்னேஸவரன் விருப்ப ஒய்வின் பேரில் கிடைத்த பணத்தை முழுமையாக வடக்கு வாசலுக்கு அர்ப்பணித்து நடத்தி வருகிறார் . தமிழக வாசகர்களிடையே பரவி செல்வாக்கைத் தேடிக் கொண்ட சிற்றிதழ் ' வடக்கு வாசல் ' .


அடுத்து மும்பையிலிருந்து வெளியிடப்படும் மாத தமிழ்ச் சிற்றிதழ் ' தமிழ் லெமூரியா '.இவ்விதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் தமிழ்ப்பற்றாளர் மட்டுமன்றி புலமையுடனும் திகழ்பவர் .மராட்டிய மாநிலத்தின் தமிழர்களுக்காக நடத்தப்படுகிற சிற்றிதழ் . ஆய்வறிஞர் தொ.பரமசிவன் , டாக்டர் சுதா சேஷய்யன் , முனைவர் சாரதா நம்பி ஆரூரன் , மருத்துவர் நடராசன் ஆகியோர்களின் படைப்புகளின் மூலம் மராட்டியம் மற்றும் தமிழக வாசகர்களி தன் வசமாக்கிய தமிழ்ச் சிற்றிதழ் இதுவாகும் .

இன்றைய சூழலில் வெளிவரும் குறிப்பிட்ட சில தமிழ்ச் சிற்றிதழ்களில் மட்டும் இக்கட்டுரையில் சுட்டியிருக்கின்றேன். மேலும் நிறைய இதழ்கள் வெளிவருகின்றன . துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே நின்று போனவை அநேகம் . அச்சு மை விலை ஏற்றம் , தாள்கள் , மெய்ப்பு திருத்தும் பணி மற்றும் நிதி ஆதாரம் ஆகியவைகளே இதழ்களின் மறைவிற்கு மூல காரணங்கள் .

சிற்றிதழ்கள் சேகரிப்பாளர் ஒருவர் தமிழ்நாடின் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் . வெளியாகும் சிற்றிதழ் முதல் இதழ் முதல் , அவ்விதழின் அடுது வரும் இதழ்களையும் சேகரிப்பவர் . சேகரித்த இதழ்கள் மற்றும் தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் . 2009 நவம்பர் மாதம் 15 தேதிவரை ' இணையத்தில் ஏற்றிய சிற்றிதழ்கள் 1100 ஆகும் . தமிழ் நூல்கள் 4000 ஐ எட்டும் . பல வருடங்களுக்கு முன் வெளிவந்த நின்று போன சிற்றிதழ்கள் விவரங்களை இணையம் வைத்திருப்பவர்கள் கீழிறக்கிப் பார்க்கலாம் . தவிர சம்பந்தப்பட்ட சிற்றிதழை மீண்டும் சொடுக்கியும் படிக்கலாம் . இவர் செய்து வரும் இப்பணி வருங்கால சந்ததியர் படித்துணர வேண்டுமென்பதே, இவரது தலையாய நோக்கமும் கூட . போற்றுதலுக்குரிய அன்புப் பணி இது .

இணையத்தில் ' www,thamizham.net. ' நாளொரு நூல் 888 ' ( nal oru nool 888 ) எனும் முகவரியில் உள்ளீடு செய்து கீழிறக்கிப் படிக்கலாம் .

இத்தகைய நற்பணிகளை பலன் கருதாது வேள்வியாகச் செய்து வருபவர் சிதம்பரத்தில் பிறந்து தற்பொழுது பொள்ளாச்சி அருகே சூளேசுவரன் பட்டியில் வாழ்ந்து வரும் நடேசன் எனும் பொள்ளாச்சி நசன் தான் மேலே குறிப்பிடப்பட்டவைகளின் நாயகனாவார் . என் கெழுநகை நண்பர் . மேலும் அதிக விபரங்கள் வேண்டுவோர் , அவரது முகவரிக்கு தொடர்பு கொண்டால் கிடைக்கும்.
திரு.பொளாச்சி நசன் ,
1 , சம்பத் நகர் ,
சூளேசுவரன் பட்டி ,
பொள்ளாச்சி
தொ.பே.04259-221278.

இவரைப் போன்ற நற்சிந்தனை கொண்டவர்களால் தான் சிற்றிதழ்கள் வளர்ந்து வருவதுடன் , தமிழ் வாசகர்களின் வாசிப்புகளுக்கும் வழி வகுக்கப்படுகின்றன என்பதை சொல்ல வேண்டியதை என் கடமையாகக் கருதுகிறேன் . மேலும் சிற்றிதழ் வாசகர்கள் , இதழாசிரியர்களை ஊக்குவிக்கும் முகத்தான் தங்களால் ஆன் உதவிகளைச் செய்தல் வேண்டும் . தொடர்ந்து சந்தா செலுத்தி சிற்றிதழ்களை வளர்க்க , நண்பர்களையும் கட்டாயப்படுத்தி வாங்கிப் படிக்கச் செய்ய வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் நோக்கம் .

சிற்றிதழ்கடலில் மூழ்கி சில முத்துக்களை கையில் கிடைத்தவை மட்டும் வாசகர்களுக்கு தந்துள்ளேன் .

நன்றி : புதுகைத் தென்றல் இதழ் -- ஜனவரி 2010

4 comments:

  1. நீங்கள் வலைப்பதிவு துவங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நிறைய விஷயங்களை நாங்கள் தெரிந்து கொள்ள எங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு. வடக்கு வாசல் இதழுக்கு உங்கள் மனத்திலும் வலைப்பூவிலும் அரியதொரு ஸ்தானத்தை அளித்திருப்பது எங்களுக்குக் கிடைத்த பெரிய கௌரவம். மிக்க நன்றி ஐயா.

    பென்னேஸ்வரன்

    ReplyDelete
  2. bharathichandran.29 June 2011 at 07:38

    arumai aiya.citrithalgal varalaru oru nathi ponrathu.athai suvaiyaga thanthathu nanru.

    ReplyDelete