Friday 27 July 2012

பதட்டம் அடையாதீர்கள்



வாழ்க்கையில் பதட்டமாகவே வாழ்பவர்கள் துன்பங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பவர்கள்.

எல்லாவற்றிற்கும் பதட்டம் கொள்பவர்களிடையே மன அமைதி இல்லாமல் தவிப்பர். ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் இவர்களிடம் சுலபமாக உள்ளே நுழைந்து உட்கார்ந்து கொள்ளும்.

அப்புறம் என்ன ! மருத்துவர்களை சந்திப்பதும், மாத்திரைகள், மருந்துகள் என்று வாழ்க்கையை வீணடித்துக் கொள்வார்கள்.

பர்ஸில் அதிகமாகப் பணம் வைத்திருந்தார். காலை அலுவலகம் செல்லுமுன் பர்ஸைத் தேடுகிறார். பணம் நிறைய இருக்கிறதே என்று நினைக்க நினைக்கப் பதட்டம் அதிகமாகிறது.

வைத்த இடம் நினைவுக்கு வரவில்லை. தேடுகிறார். மனைவியைக் கோபித்துக் கொள்கிறார். பதட்டம் காரணமாக அவருக்கு எல்லாமே மறந்து போகின்றன.

கடைக்குச் சென்றோம். சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றோம். பஸ ஏறி வீடு வந்தோம். வரிசைப்படுத்திக் கோர்வையாகச் சிந்திக்க பதட்டம் விடுவதில்லை.

மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறார். பஸஸில் ஏறும் போது பர்ஸிலிருந்து பணம் பயணசீட்டுக்காகச் சில்லறையைத் தரவில்லை. சட்டைப் பையிலிருந்து தானே சில்லறையை நடத்துனரிடம் தந்தோம்.

சிற்றுண்டிச் சாலையில் பில்லுக்குப் பணம் தரும் போது பர்ஸை அங்கேயே வைத்து விட்டோம் என்ற நினைவு பளிச்சிடுகிறது.

பதட்டத்தை ஒதுக்கி வைத்து சிந்தித்தால் தானே பர்ஸின் நிலை அவருக்குத் தெரிந்தது.

மறுநாள் சென்று சிற்றுண்டிச் சாலையில் இருந்தவரிடம் பேசினார். சில கேள்வி பதில் பரிமாற்றத்துக்குப் பின் உறுதி செய்து கொண்டு பர்ஸ உரியவரிடம் பணத்துடன் சேர்ந்தது.

கோயமுத்தூர் செல்வதற்க்குப் பதினைந்து தினங்களுக்கு முன்பே முன் பதிவு பயணச்சீட்டு பெற்றவர் அவர்.

பதட்டம் காரணமாக , அரக்கப் பரக்க பஸ பிடித்து சென்ட்ரல் ஸடேஷனுக்கு வந்து சேர்ந்தார்.
பர்ஸைத் திறந்து அப்போது தான் பயணச்சீட்டைத் தேடினார். பர்ஸில் இல்லை.

அவரது வீடு திருவான்மியூரில் இருக்கிறது. வீட்டில் வைத்து விட்ட பயணசீட்டை யார் போய் எடுத்து வருவார்கள். புறப்படு முன்பே யோசனை செய்து, பயணச்சீட்டை எடுத்துப் பர்ஸில் வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

புதிய பயணச்சீட்டை பெற்றுப் பதிவில்லாப் பயணிகளோடு, இடிபட்டு ஒருவாறாக கோயமுத்தூர் சென்றார்.

பதட்டத்தால் பணவிரயம், தடுமாற்றங்கள், போகும் இடத்துக்குச் சேர இயலுமா என்ற மனக்கிலேசம் இவைகள் தான் மிஞ்சுகின்றன.

பதட்டங்களையே வாழ்க்கையின் அங்கமாக அமைத்துக் கொள்வதை தவிருங்கள். சாவதானமாக, அமைதியுடன் சிந்தித்து செயல்படுங்கள். நீண்ட வருடங்கள் நோயின்றி வாழ்வீர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment