Sunday 8 July 2012

காலத்தின் குரல் - தி.க.சி


தோழர் தி.க.சி சற்றொப்ப அறுபது ஆண்டுகளாகப் படைப்பாளி, பத்திரிக்கையாளர் (தாமரை ), திறனாய்வாளர், கட்டுரையாளர், கதாசிரியர் என பன்முகத் தன்மையுடன் 89 ஆண்டுகள் அகவையிலும் இயங்கி வருகிறார். மட்டுமல்ல இன்று வரை 'தினமணி' செய்தித்தாளில் வாசகர் கடிதங்களாகத் தன் எண்ணங்களை, கொள்கைகளையும் தவறாது பதிவு செய்தும் வருகிறார்.

1998 ஜுன் 24 ஆம் தேதி புதன்கிழமை காலையில் பெரியவர் வல்லிக்கண்ணனும் , நானும் செல்லப்பா அவர்களை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை, 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது செல்லப்பா சொன்னார். 'வ.ரா'.வின் வாழ்க்கை வரலாற்றை சிட்டியும் , நானும் சேர்ந்து எழுதுவதாக இருந்தது. சிட்டி ஒரளவு எழுதினார். இப்போது உடல்நலக் குறைவால் தொடர்ந்து எழுத முடியவில்லையென்று என்னிடம் கொடுத்தார். ஆனால் என்னாலும் எழுத முடியவில்லை. பலமுறை ஆஸபத்திரிக்குப் போய் வந்துவிட்டேன். பல்லாயிரம் ரூபாய் கரைந்து விட்டது. இன்னும் அச்சேற வேண்டிய நூல்கள் பல உள்ளன ( பக்கம் 10-11 )

கடைசி காலத்தில் நன்கு உணர்ந்திருந்த செல்லப்பா ஒர் அற்புதமான - இதுவரை எந்தத் தமிழ் சிறுகதை எழுத்தாளரும் செய்யாத ஒர் அரிய இலக்கியப் பணியைச் செய்திருக்கிறார்.

'என் சிறுகதைப் பாணி' என்னும் நூலை விளக்கு வெளியீடாக 1995 செப்டம்பரில் நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். 288 பக்கங்கள் கொண்ட சி.சு.செல்லப்பாவின் 'சிறுகதைப் பாணி' என்னும் சிறந்த நூல், அவரது 108 கதைகளின் கதையாகும். அது மட்டுமன்றி அவரது சுயசரிதையின் முக்கிய பகுதியும் ஆகும் ( பக்கம் - 14 )




'மணிக்கொடி' சிறுகதை எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை படைத்தவர்கள், தனி ஆற்றல் வாய்ந்தவர்கள், தரமான சிறுகதைகளை வழ்ங்கியவர்கள். மறுமலர்ச்சி இலக்கியத்திற்குத் தொண்டாற்றியவர்கள். அவர்களுக்கு உரிய மதிப்பை நடுநிலையில் நின்று மன்ப்பூர்வமாக நாம் அளிக்க வேண்டும். எனினும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிகரத்தில் நிற்பவர் ( என் கருத்தில் ) புதுமைப்பித்தனே !

இதுவே 1957 ல் ' சரஸ்வதி'யில் நான் எழுதிய இரு கட்டுரைகளின் மையக்கருத்து . இக்கட்டுரைகள் செல்லப்பா, சிதம்பர சுப்ரமணியன், சிட்டி, பிச்சமூர்த்தி முதலிய மணிக்கொடி எழுத்தாளர்களால் வரவேற்கப்பட்டன. ஆனால் ஆர்.கே.கண்ணன் போன்ற என் மதிப்பிற்குரிய தோழர்களுக்கு எரிச்சலையூட்டின என்பதும் உண்மை ( பக்கம் - 15 )

17-04-1912 கேரளத்தின் நெற்களஞ்சியமான ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாட்டின் தகழி கிராமத்தில் பிறந்த சிவசங்கர பிள்ளை, 1999 ஏப்ரல் 10 ல், தமது 87 ஆம் ஆண்டு நிறைவுக்கு சில நாட்களுக்கு முன்பு தமது கிராமத்தில் மறைந்தார். இந்திய இலக்கிய வானின் ஒரு விண்மீன் விழ்ந்தது.

தமது 60 ஆண்டுக்கு மேற்பட்ட எழுத்து வாழ்க்கையில் 39 நாவல்கள், 10 குறுநாவல்கள், 21 சிறுகதைத் தொகுப்புகள் ஆக மொத்தம் 77 படைப்புகளை வழங்கியுள்ளார் தகழி. சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன், ஆ.மாதவன் ஆகியோர் தகழியுடன் நெருங்கிப் பழகிப் பேறு பெற்றவர்கள் என்பதும், ஒர் அண்ணனைப் போல, இவர்களுடன் தகழி அன்புடன் பழகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது ( பக்கம் 22 - 23 )

1965-72 ஆம் ஆண்டுகளின் போது 'தாமரை' இதழின் பொறுப்பாசிரியனாக நான் இருந்த வேளை, சர்மாவின் புகைப்படத்தை அட்டையிலும், உள்ளே பாராட்டுகளையும் வெளியிட்டுத் தோழர் ஜீவாவின் 'தாமரை' வெ.சாமிநாதசர்மாவை கெளரவித்தது என்பதும் 1965 ல் தோன்றிய ' தீபம்' இதழும், அதன் ஆசிரியர் நா.பா. அவர்களும் , சர்மா அவர்களைத் தமது துருவ நட்சத்திரமாகக் கொண்டு இயங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது ( பக்கம் 30 )

கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டில் பங்கேற்ற ( மே14,15,16 ) வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ்,சு.சமுத்திரம், கலை, இலக்கிய பெருமன்றத் தோழர் பழனிசாமி ஆகியோருடன் நானும் சேர்ந்து மே 16 காலையில் சின்னப்பபாரதியின் வேனில் பொள்ளாச்சி புறப்பட்டு 10.30 மணியளவில் கே.சி.எஸ். இல்லம் அடைந்தோம்.

அந்த ஞாயிறு காலைப்பொழுதில் தூய உடையுடன், தாடி மீசையுடன் படுக்கையில் இருந்த கவிஞர் கே.சி.எஸ் - க் கண்டதும், துயரத்தால் சில நிமிடங்கள் உறைந்து போனோம் (பக்கம்32)

1965 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் 'தீபம்' மாத இதழின் சார்பாகப் பேராசிரியர் டி.எ ஸ்.சொக்கலிங்கத்தை நான் பேட்டி கண்டேன். அடுத்தடுத்து இரு நாட்கள் சுமார் 5 மணி நேரம் அவருடன் உரையாடினேன். அப்போது 'தீபம்' ஆசிரியர் நா.பா.வும் உடன் இருந்தார்.

'காந்தி', 'தினமணி','தினசரி' ஆகிய ஏடுகளின் ஆசிரியர் தென்காசி ச.சொக்கலிங்கத்தின் தோற்றம் 3.5.1899, மறைவு 9.1.1966. அவரது ஆயுட்காலம் 67 ஆண்டுகள். தீபத்திற்காக நான் பேட்டி கண்ட சில வாரங்களுக்குள் ( பேட்டி அச்சேறு முன்னர் ) டி.எஸ்.சொக்கலிங்கம் மறைந்து விட்டார் என்பது, எனக்கும் , நா.பா.வுக்கும் மிகவும் துயர் அளித்த நிகழ்ச்சியாகும்       ( பக்கம் 38-39 )

தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், அகிலன், மு.வரதராசன், இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கன், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி மற்றும் பல படைப்பாளிகளைக் காண்டேகரின் படைப்பாற்றலும் , கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழாக்கமும் ஒரு கால கட்டத்தில் ஈர்த்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இதற்குக் காரணம் என்ன ?

“சமூக அமைப்பு முறையிலே மிகப்பெரிய புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு காண்டேகரின் கதைகள்-இது அறிஞர் அண்ணாவின் மதிப்பீடு.

“கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபயர்ப்புகளால் எனக்குத் தற்கால இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது - இது கலைஞர் கருணாநிதியின் வாக்குமூலம். காண்டேகரின் நூல்களை மராத்தியிலிருந்து மொழிபெயர்த்தத்துடன், கா.ஸ்ரீ.ஸ்ரீ நின்றுவிடவில்லை.

காண்டேகர் பிராமண வகுப்பைச் சேர்ந்த போதும் சாதி, மதப்பிரிவுகளை எதிர்த்தார். அவரது மூன்றாவது பெண் சாதி விட்டுக் காதலித்தார்.திருமணத்திற்குக் குடும்பத்தில் எதிர்ப்பு வந்தது. 'இத்திருமணத்தை ஏற்றுக் கொள்பவர் மட்டும் வரட்டும். மற்றவர் பற்றிக் கவலையில்லை' என்றார் காண்டேகர். எழுத்தில் மட்டுமன்றித் தமது சொந்த வாழ்விலும் சமூகப் புரட்சியாளராகத் திகழ்ந்தவர் காண்டேகர். எனவே தான் இத்தகைய காண்டேகரைத் தமிழ் வாசகர்களுக்குத் துணிவுடன் அறிமுகம் செய்த கா.ஸ்ரீ.ஸ்ரீ யைத் தமிழ்ச் சமுதாயம் போற்றுகிறது. அவரது நினைவுக்குத் தலைதாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது ( பக்கம் 45 )

கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய வரவேற்கத்தக்க ஆரோக்கியமான இதழ்களைப் பற்றி எண்ணும் போது கோமல் சுவாமிநாதனின் ' சுபமங்களா'வின் அற்புதமான இலக்கியப் பணியை என்னால் என்றுமே மறக்க இயலாது . 'சிற்றேடுகளுக்கும்', 'பொழுதுபோக்கு ஏடு'களுக்கும் இடையேயான நடுவாந்திர ஏடு 'சுபமங்களா'. தரமான புதுமையான தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் மட்டுமன்றி, நாடகம், திரைப்படம் முதலிய கலைகளின் முன்னேற்றத்திற்கும், ஆக்கபூர்வமாகப் பணியாற்றிய அருமையான இலக்கிய இதழ் 'சுபமங்களா'. கோமலின் மறைவுடன் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இது தமிழ் கலை இலக்கியத்துறைக்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.

கோமல் ஒரு மக்கள் கலைஞர், மக்கள் எழுத்தாளர், உலகக் கலை இலக்கியச் சிகரங்களைத் தமிழின் எட்டிப் பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் பணியாற்றிய சீரிய படைப்பாளி + பத்திரிக்கை ஆசிரியர். அவர் சென்ற அளவுக்கு இன்றைய ஜனரஞ்சகப் பத்திரிக்கை ஆசிரியர்கள் செய்வார்களா என்பது சந்தேகம் ! ( பக்கம் 62 )

இதுவரை முந்தைய பத்திகளில் நீங்கள் படித்தவை ' காலத்தின் குரல் - தி.க.சி' நூலில் தரப்பட்டுள்ள கருத்துரைகளில் சிலது தான். ஆனால் நிறைய தரவுகள், தகவல்கள் நிறைந்த பலவற்றை இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் படிப்பது நன்மை பயக்கும்.

இந்நூலின் தொகுப்பாசிரியர் வே.முத்துக்குமார். தொகுப்பிற்கான கட்டுரைகளை சேகரிக்க அவரின் அனுபவத்தை முன்னுரையாகத் தந்துள்ளார். இவரது ' ஆவாரம்பூ' பதிப்பகத்தின் முதல் வெளியீடு என அறிந்தேன். எந்த வயதினரும் படிக்கக்கூடிய எழுத்துருக்கள், உயர்ரக தாள், வடிவமைப்பு, அச்சாக்கம், குறிப்பாக பிழைகள் காணாத 'மெய்பு' திருத்தம் என அருமையான நூலாக வெளியிட்டுள்ளார்.

மூத்தோர் சொற்கள் முந்திய வரலாற்றில் பயணிக்கும் வாய்ப்பை உண்டாக்கித் தருகிறது. மூத்தோர் சொல் வழியே போய், அவர் காட்டும் நூல்களை, வரலாறுகளைக் கற்பதும், இத்தேடல்கள் மூலம் நம்மை உருவாக்கிக் கொள்வதும் ஒரு தொடர் ஒட்டமாகும். ஒரு ஒட்டமல்ல. ஒரு ஒட்டத்திலிருந்து மற்றொரு ஒட்டம். ஒரு தகவலிலிருந்து மற்றொரு தகவல் - ஒன்றிலிருந்து மற்றொரு தேடல் என வாசிப்பவரை உயர்த்திக் கொண்டே போகிறது, தி.க.சி.யின் இந்தக் காலத்தின் குரல் “ என எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தனது அணிந்துரையில் கூறியுள்ளார்.

இவையனைத்தும் உண்மை என்பதை இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் தப்பாது உய்த்து உணர முடியும்.


குரு ராதாகிருஷ்ணன் 

நன்றி : கணையாழி ஜூலை 2012

No comments:

Post a Comment