Monday 6 August 2012

பரிகாரங்கள் தேவை


கிராமங்களில் இனப்பகை, குடும்பப் பகை இன்றும் இருக்கின்றன. பகை முற்றிக் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. பொதுச் சொத்துக்கள் ஏராளமாக நட்டமாக்கப்படுகின்றன.

இவைகள் வேறு உருவங்களில் நகரங்களை நோக்கி வந்துவிட்டன.

அரசியல் பகை, அலுவலகப் பகை, பணம் ஈட்டுவதில் பகை என பல வழிகளில் உருவாக்கப்பட்டுவிட்டன.

அவசரகதியின் காரணமாக இவைகளில் தங்களை நுழைத்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் நிறைய உண்டு.

பிறர்மீது ஆத்திரப்பட்டுப் பகை தேடிக் கொண்டவர் இறுதியில் தோல்வியே கண்டடைவர்.

மேலே கூறப்பட்ட பகைகள் சாசுவதமானவைகள் என்று நினைக்காதீர்கள்.

கால மாற்றத்தினால் அவைகள் காணாது போய்விடும்.

அரசியலில் கட்சிகளுக்கிடையே வளரும் பகை தொண்டர்களைப் பலி வாங்கும். அபூர்வமாகக் கட்சித் தலைவர் மரணமடைவதுண்டு, சில சமயங்களில்.

நிரந்தர கட்சி அரசியலில் இன்றைக்குத் தேவைப்படாமல் போனது எல்லோரும் அறிந்த உண்மை.

ஆளுங்கட்சி செல்வாக்கு, அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும்போது அடிபட்டுப் போகும்.
அலுவலகப் பதவியால் நற்பெயரும், செல்வாக்கும் பெறுபவர்கள் மீது உடன் பணியாற்றுபவர்கள் சிலர் பகைமை பாராட்டுவது உண்டு. இதனால் அலுவலகப் பணிகளில் சங்கடங்கள் ஏற்படும். பாதிக்கப்படுவது மக்களே என்பதை உணர மாட்டார்கள்.

மாறுதலில் அத்தகையோர் சென்று விட்டால் அலுவலகப் பகை மறந்து போகும்.

சொல்திறன், சந்தை விற்பனையில் கவனம்; தடங்கல்களிலிருந்து சமாளித்தல், வாடிக்கைகாரர்களிடம் பழகும் பண்பு இவைகளே ஒருவரின் பொருள் ஈட்டலில் முக்கியமானதாகும்.

இவைகளை அறிந்து கொள்ளாமல் வியாபாரத்தில் பகையை வளர்ப்பதுண்டு.

இவர்களுக்குப் பணம் சேர்க்க இயலாது. திறமைகள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு வகைகளில் குடி கொண்டிருக்கும்.

அவனுக்கு நான் இளைத்தவனா என்ற மனப்பான்மை நீண்ட நாள் இருக்காது.

பணம் காற்றில் பறக்கும் தூசியைப் போன்றது. காற்று பலமாகச் சுழன்றடிக்கும் போது உயரமான இடங்களில் போய் அமரும். அடுத்து அடிக்கும் காற்று அதைக் குப்பை மேட்டில் சேர்த்து விடும்.

தத்துவமல்ல நிதர்சனம்.

பகைகளைக் களைய காலத்தின் கையில் ஒப்படைத்து விடுவது தான் சாலச் சிறந்தது.

அதுவே சரியான பரிகாரமாகும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment