Saturday 10 November 2012

5.எட்வர்ட் ஜென்னர் (1749-1823)


பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரிய அம்மை நோயை முற்றிலுமாகக் களைந்து விட்டதாக மருத்துவத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். இத்தகைய தீர்வுக்கு முன்னோடியான ஒருவரை கட்டாயமாக நாம் நினைவு கூறுதல் சாலப் பொருத்தமாக இருக்கும்.

அவர் தான் டாக்டர் எட்வர்டு ஜென்னர். இவரது சலியாத உழைப்பும் ஆராய்ச்சிகளுமே அம்மை நோய்க்கான எதிர்ப்பு மருந்தான 'அம்மை வாக்சினை'க் கண்டுபிடிக்க உதவின.

இங்கிலாந்திலுள்ள 'பெர்க்லி' என்னும் ஊரில் இவர் 17.5.1749ல் பிறந்தார்.

செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் எம்.டி. பட்டம் பெற்றார்.

1788ல் 'காதரின் கிங்ஸகோட்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.

பதிமூன்றாம் வயதில் பள்ளியை விட்டு விலகினார். அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரிடம் எட்டு ஆண்டுகளாகப் பயிற்சியாளராகச் சேர்ந்து மருந்து மற்றும் அறுவை சிகிச்சைகளைப் பற்றிய நிறைவான அறிவினைப் பெற்றார்.

லண்டனின் பெயர் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான ஜான்ஹன்ட்டர் என்பவரின் கீழ் பணியாற்றினார். இவ்வித பணியின் மூலம் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இவர் அடைந்தார்.

'பெர்க்லி' நகருக்குத் திரும்பினார். இங்கு தான் மருத்துவத்துறையில் பல அளப்பரிய செயல்களைச் செய்து காட்டினார். அதிக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையைச் செய்ததின் மூலம் மருத்துவத்துறைக்கே பெருமையைப் பெற்றுத் தந்தார்.

பால் பண்ணையில் வேலை செய்யும் 'சாரா நெல்ம்ஸ்' என்னும் பெண் தன் கையில் ஒரு கொப்புளத்துடன் இவரை அணுகினாள். அப்பெண்ணுக்கு பசுவின் அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்டார் (1796).

அக் கொப்புளச் சீழை எடுத்து ' ஜேம்ஸ பிப்ஸ்' என்னும் எட்டு வயதுச் சிறுவனின் உடம்பில் செலுத்தினார் ஜென்னர். சிறுவனின் உடலில் நிறைய அம்மைக் கொப்புளங்கள் தோன்றின. கூடவே ஜுரம் கண்டது.

ஜென்னர் தன் கண்டுபிடிப்பான ' வாக்சினை' சிறுவனின் உடலில் சீரடைந்தது. மீண்டும் ஒன்றரை மாதத்தில் சிறுவனின் உடல்நலம் சீரடைந்தது. மீண்டும் அம்மை கொப்புளச் சீழை செலுத்திப் பார்த்தார். சிறுவனின் உடலில் அம்மைக் கொப்புளங்கள் எதுவும் காணப்படவில்லை. ஏற்கனவே அம்மை தடுப்பு வாக்சினை செலுத்தியதின் விளைவு இது என்பதைக் கண்டறிந்தார் ஜென்னர்.

உலகில் முதன்முதலாகத் தரப்பட்ட 'அம்மை வாக்சின்' இதுவே எனக் குறிப்பிடப்படுகிறது.

லண்டனிலுள்ல ராயல் சொசைட்டிக்கு இது பற்றிய ஆராய்ச்சி ஏட்டினைச் சமர்ப்பித்தார் (1798). ஆனால் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி ஏட்டினை நிராகரித்து விட்டனர்.

மீண்டும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பசுவின் அம்மை பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவைக்கூறும் கையேடு ஒன்றினை வெளியிட்டார்.

இக்கையேட்டின் பெயர் 'அன் என்குயரி இன்டு தி காஸஸ் அண்ட் எஃபெக்ட் ஆஃப் தி வேரியோலே வாக்சினே' என்பதாகும்.

லண்டன் நகருக்கு வருகை புரிந்து கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு அம்மைநோய் எதிர்ப்பு வாக்சின்களைப் போட்டார். யார்க் இளவரசர், பிரிட்டிஷ் பிரபு மற்றும் ராணியையும் சந்தித்தார்.

'தேசீய வாக்சின் இன்ஸடிடியூட்' என்னும் நிறுவனத்தைத் துவக்கினார் ஜென்னர் (1808).

பிரிட்டிஷ் பாராளுமன்றம் இவருக்குப் பத்தாயிரம் பவுன்களை ரொக்கப் பரிசாக அளித்து கெளரவித்தது (1802).

அதுமட்டுமல்லாது மீண்டும் பாராளுமன்றம் இருபதாயிரம் பவுன்களை ரொக்கப் பரிசாக வழங்கிக் கெளரவித்தது (1806).

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஜென்னருக்குக் கெளரவப் பட்டமாக 'எம்.டி' பட்டத்தை வழங்கியது.

ரஷ்ய ராணி இவருக்கு வைர மோதிரமும், இறப்பு வரை ஒய்வூதியமும் அளித்தார்.

இவரது கண்டிபிடிப்பை சிலாகித்துப் பாராட்டுக் குறிப்பு ஒன்றை வழங்கியவர்                            'நெப்போலியன்' ஆவார். இவருக்கு 'நைட்ஹுட்' என்னும் கெளரவப்பட்டமும் பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்டது.

இவரது வெண்கலச் சிலை லண்டனின் டிரஃபால்கர் சதுக்கத்தில் நிர்மாணித்துப் பின் கென்ஸிங்டன் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

'க்ளெவ்ஸ்டர்' தேவாலயத்தில் இவரது பளிங்குச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

'பெர்க்லி' நகரில் தன் எழுபத்து நான்காம் வயதில் 26-01-1823 அன்று மரணம் அடைந்தார் எட்வர்டு ஜென்னர்.

உலகில் மனிதகுலம் இருக்கும் வரை இப்பெருமகனாரின் பெயரும் நின்று நிலவும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment