Monday 14 November 2011

செய்தியைத் தெரிவிப்பதில் கவனம்



இன்பம் தரும் செய்திகளை எந்த நிலையிலும் சமயங்களிலும் தெரிவிக்கலாம் . இதற்கு எவ்வித கவனமும் இங்கிதமும் தேவைப்படுவதில்லை .

மாறாகத் துன்பம் தரும் செய்திகளை தெரிவிப்பதில் கவனம் மிகவும் அவசியம் . நிதானத்தைக் கூடவே கடைபிடிப்பது மிகவும் நன்மை பயக்கும் . சம்பந்தபட்டவர்களிடம் துன்பச் செய்திகள் சேரும் போது ஏற்படுத்துகின்ற பாதிப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் .

அவசரம் காட்டுபவர்கள் அவலங்களை ஏற்படுத்தும் நபர்களாகத் தோன்றுவார்கள்.
 
கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபருக்கு துன்பம் தரும் செய்தி எதுவாக இருக்கும் ? தொழிலில் நட்டம் . ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் வெளிநாட்டின் துறைமுகத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன . இச்செய்தி தொழிலதிபருக்கு நிச்சயம் துன்பம் தரக்கூடியதே .

பெற்று வளர்த்துச் சீராட்டிய தாயின் மரணம் , தன் மகளின் எதிர்காலத் திட்டத்தை வகுக்கும் தகப்பனின் திடீர் மரணம் , இவைகள் சம்பந்தபட்டவர்களைத் துயரத்தில் ஆழ்த்தக் கூடியவைகளே .

இவ்வகைச் சோகச் செய்திகளைத் தெரிவிக்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்படுகின்றன .

இந்நிலையில் செய்ய வேண்டியதைப் பார்ப்போம் .

துன்பச் செய்திகளைத் தெரிவிப்பவரே பாதிக்கப்பட்டிருப்பினும் வெளியில் காட்டிக் கொள்ளுதல் தவிர்க்க வேண்டும் . மெதுவாகவும் , பக்குவமாகவும் , சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செய்தியைத் தெரிவிக்க வேண்டும் .

அவசரத்துடன் அப்பட்டமாகவே சொல்லுதல் கூடாது . பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . தீவிரம் உணர முடியும் .

நிதானமாக பீடிகை போடுவது போல் விஷயத்தை சம்பந்தபட்டவர்களிடம் சொல்லி முடிக்க வேண்டும்

பாதிக்கப்பட்டவரின் மனதில் ஏற்படும் வருத்தங்களைக் களைவது போல் ஆறுதலாகப் பேச வேண்டும் . சிலர் இந்த சமயத்தில் சம்பந்தமில்லாதவைகளைப் பேசி துக்கத்தை அதிகப்படுத்துவர் . இது மிகவும் கொடுமையானது .

வருத்தமடைபவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் ஆறுதலாக சுருக்கமான வார்த்தைகளைக் கூறினாலே போதும் .

துன்பச் செய்திகளைக் கேட்டவர்கள் துவண்டு போகாமல் தங்களைத் தேற்றிக் கொண்டு மேற்கொண்டு காரியங்களைச் செய்து முடிக்கத் துணிவார்கள் .

குரு ராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment