Thursday, 23 August 2012

மனநிறைவு தேவை


'செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்'. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் இந்தப் பாடல் வரிகள் எல்லாக் காலத்திலும் நினைவில் கொள்ளத்தக்கவை.

திறமைக்கேற்ற பதவி அநேகருக்குக் கிடைப்பது இல்லை.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கின்றன. வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடுகள் இருக்கின்றன.

தனியார் நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் பணியாற்றுபவர்கள், தங்கள் பணிகளைச் செம்மையாகச் செய்தல் வேண்டும்.

அதைவிட்டு நம் திறமை என்ன ? பாழாய்ப் போன இந்த வேலையில் வந்து மாட்டிக் கொண்டேனே ! என்று மனம் புழுங்குகிறவர்கள் தான் நிறைய இருக்கின்றனர்.

வேலை கிடைக்கும் முன் அவர் பட்டபாட்டை விரைவில் மறந்து போவார்.

வருகின்ற பேரூந்தில் நிற்பதற்கு இடம் கிடைத்தால் போதும். கிடைக்குமா ? இது ஆரம்ப நினைப்பு.

நிற்க இடம் கிடைத்து விட்டது. உட்கார் இடம் கிடைக்காதா? என அலைபாயும் மனதின் இடை நினைப்பு.

உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. சன்னல் அருகில் காற்றாட உட்கார்ந்தால் நல்லது என நினைக்கும் இறுதி நினைப்பு.

அத்தோடு நின்று விடாது. தொடரும் நினைப்புகள், இதற்கு விடிவே இல்லை.
எந்தப் பணி என்றாலும் மன நிறைவோடும் ஈடுபாடுடன் செய்து பழகுங்கள்.

எந்த நிலையிலும் தான் பார்க்கும் பணி மோசமானது என்ற தவறான எண்ணத்தை விலக்குங்கள்.

வேலை தேடித் தரும் அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருப்பவர்கலை எண்ணிப் பாருங்கள்.

உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அன்போடு பழகுங்கள். உங்களின் பணியை முடித்து விட்டு மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மற்றவர்கள் மீது கரிசனம் காட்டும் போது அவர்களின் அன்பு கேட்காமலேயே நமக்குக் கிடைத்து விடும்.

பணியில் ஈடுபாடு அதிகமானால் திறமை வெளிப்படும். இனங்கண்டு மற்றவர்களால் நம் திறமை பாராட்டுக்கு உட்படும் போது மகிழ்ச்சி கரை புரண்டு ஒடும்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முதுமொழியை எண்ணிப் பார்ப்போம்.


குரு ராதாகிருஷ்ணன்

Wednesday, 15 August 2012

சரி செய்து கொள்ளுங்கள்


அறிகுறிகளை அறிவித்துக் கொண்டு தான் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கூர்மதியினால் அவைகளைத் தெரிந்து கொண்டவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று முன்பே அறியும் ஆற்றல் ஏற்படும்.

சிலர் எல்லாமே நம் வினைப்படிதான் நடக்கும். தடுக்க யாராலும் முடியாது. நம் விதியின் பயனே என்றவாறே இருந்து விடுவர்.

இவர்களை 'சோற்றால் அடித்த பிண்டம்' என்று தான் அழைக்க வேண்டும். இவரைப் போன்றவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் உதவ இயலாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர்.

ஒரு செயல் நல்லதோ, கெட்டதோ, பயன்பாட்டின் போது நல்லவைகளுக்கு அறுகுறிகளிலும் கெட்டவைகளுக்கு தடயங்களும் கிடைப்பது தான் நியதி.

நற்செயல்களின் கர்த்தாக்களுக்கு அறிகுறிகளின் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கொடுஞ்செயல் புரிபவர்களை கைது செய்ய தடயங்கள் உதவியதாகக் காவல்துறையினர் வாக்குமூலங்களின் வாயிலாகத் தெரிய வருகின்றன.

இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. அறிந்தால் வேறு விதமாகச் செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கலாமே என எண்ணுவது சிலரின் வழக்கம்.

சுயசிந்தனை அற்றவர்கள் தான் இவ்வாறு நினைக்கின்றனர்.

தன் அறிவுக்கு வேலை தந்திருப்பார் எனில் இவ்வாறு எண்ணுவதை விலக்குவார்கள். நிகழ்வுகளும் வேறு விதமாக நடந்திருக்கும்.

இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்வியல். இரண்டையும் ஏற்றுக் கொண்டு சரி செய்து கொண்டால் நாம் வளம் பெற முடியும்.
சுயசிந்தனை, அறிவாற்றல், ஈடுபாடு, தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் வெற்றி நடை போடுவார்கள்.

நடப்பதை யார் தடுக்க இயலும். எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று வேதாந்தம் பேசி, நத்தைபோல் சுருங்கி முடங்கிப் போகிறவர்கள் தோல்விகளையே கேட்டுப் பெறுபவர்கள் ஆவர்.

வாழ்க்கையைச் சரி செய்து கொண்டு செல்ல முயலுங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday, 6 August 2012

பரிகாரங்கள் தேவை


கிராமங்களில் இனப்பகை, குடும்பப் பகை இன்றும் இருக்கின்றன. பகை முற்றிக் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. பொதுச் சொத்துக்கள் ஏராளமாக நட்டமாக்கப்படுகின்றன.

இவைகள் வேறு உருவங்களில் நகரங்களை நோக்கி வந்துவிட்டன.

அரசியல் பகை, அலுவலகப் பகை, பணம் ஈட்டுவதில் பகை என பல வழிகளில் உருவாக்கப்பட்டுவிட்டன.

அவசரகதியின் காரணமாக இவைகளில் தங்களை நுழைத்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் நிறைய உண்டு.

பிறர்மீது ஆத்திரப்பட்டுப் பகை தேடிக் கொண்டவர் இறுதியில் தோல்வியே கண்டடைவர்.

மேலே கூறப்பட்ட பகைகள் சாசுவதமானவைகள் என்று நினைக்காதீர்கள்.

கால மாற்றத்தினால் அவைகள் காணாது போய்விடும்.

அரசியலில் கட்சிகளுக்கிடையே வளரும் பகை தொண்டர்களைப் பலி வாங்கும். அபூர்வமாகக் கட்சித் தலைவர் மரணமடைவதுண்டு, சில சமயங்களில்.

நிரந்தர கட்சி அரசியலில் இன்றைக்குத் தேவைப்படாமல் போனது எல்லோரும் அறிந்த உண்மை.

ஆளுங்கட்சி செல்வாக்கு, அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும்போது அடிபட்டுப் போகும்.
அலுவலகப் பதவியால் நற்பெயரும், செல்வாக்கும் பெறுபவர்கள் மீது உடன் பணியாற்றுபவர்கள் சிலர் பகைமை பாராட்டுவது உண்டு. இதனால் அலுவலகப் பணிகளில் சங்கடங்கள் ஏற்படும். பாதிக்கப்படுவது மக்களே என்பதை உணர மாட்டார்கள்.

மாறுதலில் அத்தகையோர் சென்று விட்டால் அலுவலகப் பகை மறந்து போகும்.

சொல்திறன், சந்தை விற்பனையில் கவனம்; தடங்கல்களிலிருந்து சமாளித்தல், வாடிக்கைகாரர்களிடம் பழகும் பண்பு இவைகளே ஒருவரின் பொருள் ஈட்டலில் முக்கியமானதாகும்.

இவைகளை அறிந்து கொள்ளாமல் வியாபாரத்தில் பகையை வளர்ப்பதுண்டு.

இவர்களுக்குப் பணம் சேர்க்க இயலாது. திறமைகள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு வகைகளில் குடி கொண்டிருக்கும்.

அவனுக்கு நான் இளைத்தவனா என்ற மனப்பான்மை நீண்ட நாள் இருக்காது.

பணம் காற்றில் பறக்கும் தூசியைப் போன்றது. காற்று பலமாகச் சுழன்றடிக்கும் போது உயரமான இடங்களில் போய் அமரும். அடுத்து அடிக்கும் காற்று அதைக் குப்பை மேட்டில் சேர்த்து விடும்.

தத்துவமல்ல நிதர்சனம்.

பகைகளைக் களைய காலத்தின் கையில் ஒப்படைத்து விடுவது தான் சாலச் சிறந்தது.

அதுவே சரியான பரிகாரமாகும்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday, 30 July 2012

தவறு செய்யாது இருக்க



குழந்தைகள் பிறக்கும் போது நல்லவர்களாகத் தான் இருக்கின்றனர்.

அவர்களின் வளர்ப்பின் ஊடாகத் தான் நல்லவர் தீயவர் ஆக்கப்படுகின்றனர்.

அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளை ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்ப்பதில் அக்கறை மிக்கவர்கள் தான்.

பின்னாளில் பிள்ளைகள் வளர்ந்ததும், தடம் மாறிப் போவது சாதாரண விஷயமாகிப் போனது.

மேலைநாட்டு நாகரீக மோகம், மாஸ்மீடியா எனப்படும் டெலிவிஷன், வீடியோ காசட்டுகள் தான் அவைகளுக்குக் காரணமாகிவிட்டன.

தடம் மாறும் இளைஞர்கள், பெண் பிள்ளைகளும் தான் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு.

நமது நடவடிக்கைகள் யாரோ ஒருவரால் கவனிக்கப்பட்டு விடும். செய்தி தங்கள் பெற்றோரிடம் போய்ச் சேர்ந்து விடும் என்ற எண்ணம் மனதில் எழ வேண்டும், எப்போதும்.

உணர்வுபூர்வமாக எண்ண வேண்டும். அதுவே குற்றங்களைச் செய்வதை தடுத்துவிடும்.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ மானவிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகின்றன.

அப்பா பிள்ளையை சபையில் முன் வைத்து உதவ வேண்டும்.

தன்பிள்ளை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர், சாஃப்ட்வேர் இன்ஜினியர் என உருவாகப் போகிறான். தரம் மிகுந்த எதிர்பார்புகளே இவைகள்.

மகன் அறிஞன் என்பதைக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த காலத்தை விட அதிக சந்தோஷப்படுவாள் என்ற குறளுக்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகள் இருந்தால் அதன் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா ! எதிர்பார்ப்புகளும் தோற்றுப் போவதில்லை.

போதைப் பொருளின் மீதான் விழிப்புணர்வைப் பெறுங்கள். நாளைய உலகம் நன்றியுடன் உங்களை கரம் கூப்பி வரவேற்கும். சமூக விரோதிகளை விட்டு விலகுங்கள்.

பெரியவர்களை எண்ணிக் கொண்டாலே போதும் இளைய தலைமுறையினர் குற்றம் செய்ய மாட்டார்கள்.

சிறைக் கைதிகளிடம் உரையாடியவர்கள் தெரிவிக்கும் முடிவுகளைப் பார்ப்போம். பெரும்பாலான கொலைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பினால் நிகழ்ந்தவைகள்.

‘தலைல, லேசா தான் தட்டினேன். பொட்டுன்னு போய்ட்டா’ என்று மனைவியின் சாவை நியாயப்படுத்தும் கணவன் சிறையில் தனிமையில் சிந்திக்கிறான். தெளிவு பிறக்கிறது.

குடும்பம்,குழந்தைகள் சிதைந்து போனதை எண்ணி வாடுகிறான். குற்றம் செய்வதற்கு முன் யோசித்து இருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமோ ?

தவறுகள் நிகழாதிருக்க நல்ல வழிகளைச் சிந்தித்து எல்லோரும் கடைப்பிடிப்போம்.


குரு ராதாகிருஷ்ணன்

Friday, 27 July 2012

பதட்டம் அடையாதீர்கள்



வாழ்க்கையில் பதட்டமாகவே வாழ்பவர்கள் துன்பங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பவர்கள்.

எல்லாவற்றிற்கும் பதட்டம் கொள்பவர்களிடையே மன அமைதி இல்லாமல் தவிப்பர். ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் இவர்களிடம் சுலபமாக உள்ளே நுழைந்து உட்கார்ந்து கொள்ளும்.

அப்புறம் என்ன ! மருத்துவர்களை சந்திப்பதும், மாத்திரைகள், மருந்துகள் என்று வாழ்க்கையை வீணடித்துக் கொள்வார்கள்.

பர்ஸில் அதிகமாகப் பணம் வைத்திருந்தார். காலை அலுவலகம் செல்லுமுன் பர்ஸைத் தேடுகிறார். பணம் நிறைய இருக்கிறதே என்று நினைக்க நினைக்கப் பதட்டம் அதிகமாகிறது.

வைத்த இடம் நினைவுக்கு வரவில்லை. தேடுகிறார். மனைவியைக் கோபித்துக் கொள்கிறார். பதட்டம் காரணமாக அவருக்கு எல்லாமே மறந்து போகின்றன.

கடைக்குச் சென்றோம். சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றோம். பஸ ஏறி வீடு வந்தோம். வரிசைப்படுத்திக் கோர்வையாகச் சிந்திக்க பதட்டம் விடுவதில்லை.

மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறார். பஸஸில் ஏறும் போது பர்ஸிலிருந்து பணம் பயணசீட்டுக்காகச் சில்லறையைத் தரவில்லை. சட்டைப் பையிலிருந்து தானே சில்லறையை நடத்துனரிடம் தந்தோம்.

சிற்றுண்டிச் சாலையில் பில்லுக்குப் பணம் தரும் போது பர்ஸை அங்கேயே வைத்து விட்டோம் என்ற நினைவு பளிச்சிடுகிறது.

பதட்டத்தை ஒதுக்கி வைத்து சிந்தித்தால் தானே பர்ஸின் நிலை அவருக்குத் தெரிந்தது.

மறுநாள் சென்று சிற்றுண்டிச் சாலையில் இருந்தவரிடம் பேசினார். சில கேள்வி பதில் பரிமாற்றத்துக்குப் பின் உறுதி செய்து கொண்டு பர்ஸ உரியவரிடம் பணத்துடன் சேர்ந்தது.

கோயமுத்தூர் செல்வதற்க்குப் பதினைந்து தினங்களுக்கு முன்பே முன் பதிவு பயணச்சீட்டு பெற்றவர் அவர்.

பதட்டம் காரணமாக , அரக்கப் பரக்க பஸ பிடித்து சென்ட்ரல் ஸடேஷனுக்கு வந்து சேர்ந்தார்.
பர்ஸைத் திறந்து அப்போது தான் பயணச்சீட்டைத் தேடினார். பர்ஸில் இல்லை.

அவரது வீடு திருவான்மியூரில் இருக்கிறது. வீட்டில் வைத்து விட்ட பயணசீட்டை யார் போய் எடுத்து வருவார்கள். புறப்படு முன்பே யோசனை செய்து, பயணச்சீட்டை எடுத்துப் பர்ஸில் வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

புதிய பயணச்சீட்டை பெற்றுப் பதிவில்லாப் பயணிகளோடு, இடிபட்டு ஒருவாறாக கோயமுத்தூர் சென்றார்.

பதட்டத்தால் பணவிரயம், தடுமாற்றங்கள், போகும் இடத்துக்குச் சேர இயலுமா என்ற மனக்கிலேசம் இவைகள் தான் மிஞ்சுகின்றன.

பதட்டங்களையே வாழ்க்கையின் அங்கமாக அமைத்துக் கொள்வதை தவிருங்கள். சாவதானமாக, அமைதியுடன் சிந்தித்து செயல்படுங்கள். நீண்ட வருடங்கள் நோயின்றி வாழ்வீர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

உண்மை தான் ...

( 27-07-2012 தினமணி நாளிதழில் வெளியான  கடிதம் )

'வரலாற்று  இரவு' கட்டுரை படித்தேன் . தடயங்களும் , ஆவணங்களும் இருந்தும் கூட நூறு  அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் சில இடங்களில் நடந்த சம்பவங்களைச்  சரியான முறையில் பதிவு செய்யாத,  செய்ய விரும்பாதவர்கள் செய்த வரலாற்றுப் பிழைகள் இருப்பது உண்மை தான்.






இதெல்லாம்  சரிசெய்யும் அளவில் ஈரோடு  ' மக்கள் சிந்தனை பேரவை'யின் தலைவர் எழுத்தாளர் ஸ்டாலின்  குணசேகரன்  தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டின்  பட்டிதொட்டிகளிலுள்ள பாரத விடுதலைப் போர் தியாகிகளின் வரலாற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி , ' சுதந்திரப் போர் ' எனும் பெரிய நூலை எழுதியுள்ளார் . இதற்கான தரவுகளை, ஆவணங்களை , நிழற்படங்களைச்   சேகரிக்க அவர் பட்டபாடுகள்  அதிகம்.இந்நூலை  கட்டுரையாளர் வாசித்திருப்பின் அவரது நிலை வேறாகியிருக்கும் .



குரு ராதாகிருஷ்ணன் 

நன்றி : தினமணி நாளிதழ்  27-07-2012

Friday, 20 July 2012

தாழ்ச்சி, உயர்ச்சி பார்க்க வேண்டாம்



மகாகவி பாரதியார் பாப்பாக்களுக்குப் பாடியுள்ளார். உதாரணத்துக்கு –


சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் !
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்


பாப்பாக்களுக்கானது என எண்ணாதீர்கள். பெரியவர்களும் இப்பாடலை படித்துப் பயன் பெறுதல் அவசியம்.


சாதிகள் வருணாசிரம் தர்மத்தை வைத்து உண்டானது என்பர் சான்றோர்கள்.


சமுதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகைத் தொழில்களுக்குள் அடங்கி விட்டன.


நாட்டில் ஒழுக்கத்தையும், தர்மத்தையும், கட்டுப்பாட்டையும் கல்வியையும் வளர்ப்பது ;


போர் புரிந்து நாட்டைப் பகைவர்களிடமிருந்து காப்பது ;


வாணிகம், தொழில் நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது ;


உடல் உழைப்பை மேற்கொண்டு குடியிருப்புகள், சாலைகள், தொழிற்கூடங்கள், உலைக்கூடங்கள் முதலியவைகளை அமைத்து மேற்கூறிய மூன்று வகையினருக்கும் உதவுவது.


இவ்வாறு வரையறுக்கப்பட்ட நியதிகளைப் பிற்காலத்தவர்கள் வேறுவிதத்தில் நினைக்கத் தலைப்பட்டனர்.


இதனால் வலிந்து தேடிக் கொண்ட வினைகள் ஏராளம். அவைகளை ஆராயப் புகுவதை நிறுத்துவது எல்லோருக்கும் நல்லது.


சமயம்,சாதி,இனம்,குலம் என்று பாராது எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள்.

நமக்கென்று நல்லவர்கள் பலர் கூடுவர். ஆபத்து காலங்களில் உதவுபவர்களில் பலர் முன்பின் அறியாதவர்களாகத் தான் அப்போது தெரிவர். அத்தகையோரிடம் மனிதாபிமானம் நிறைந்திருக்கும்.

பிறர் வீட்டு விசேடங்களில் கலந்து கொள்பவர்கள் பத்தோடு, பதினொன்றவதாக இருக்க முயலாதீர்கள்.


திருமண வீட்டிற்குச் சென்றால், நம்மால் முடியும் சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும்.


துக்க காரியம் நடந்த வீட்டிலும் அப்படியே செய்யுங்கள்.


இரு வீட்டாரிடமும் உங்களின் மதிப்பு உயரும். நாம் கேட்டுக் கொள்ளாமலேயே இவர் நம்முடைய வேலைகளைச் செய்கிறாரே ! உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என்று எண்ணுவார்கள்.


நாம் பிறர் மீது காட்டும் அன்பு நம்மிடம் திரும்ப வரும் போது கிடைக்கும் இன்பத்துக்கு இணை ஏதுமில்லை. அன்பு எல்லோருக்கும் பொதுவானது . அதை செலவின்றி கொடுக்கவும் பெறவும் முடியும்.



குரு ராதாகிருஷ்ணன்