Friday, 11 November 2011

சாதனைகளுக்குள் வேதனை



நிகழ்வுகளில் அனுபவம் பெற்றவர்கள் பலர் சாதனையாளர்களாக திகழ்ந்திருப்பதை வரலாறுகள் நமக்குத் தெரிவிக்கின்றன .

வேதனை தரும் விஷயங்கள் என்றாலும் அவைகளை எண்ணித் துவண்டு போனதில்லை .

பாரத நாட்டின் விடுதலைக்குப் போராடிய தியாகிகள் அநேகம் . அவர்களில் பண்டித மதன் மோகன மாளவியாவும் ஒருவர்.

காசி இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் . நிதி வசூல் செய்ய இந்திய நாட்டின் எல்லா பாகங்களுக்கும் சென்றவர் . ஹைதராபாத்தின் நிஜாமை சந்தித்துப் பேசினார் . இந்துப் பல்கலைக்கழகம் அமைக்க எம்மிடமா பணம் கேட்கிறாய் எனக் கோபத்தில் தன் கால் செருப்பைக் கழற்றி மாளவியா மீது எறிந்தார்.

தன் மீது விழுந்த செருப்பை புன்சிரிப்போடு எடுத்துக் கொண்டு நிஜாமிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

நகரின் மையப்பகுதிக்கு வந்து மாளவியா பேசினார் . மக்கள் கூடினர். நிஜாமின் அரண்மனையில் நடந்த நிகழ்வுகளை விவரித்தார். நிஜாமின் ஒற்றைச் செருப்பை ஏலம் விடப் போவதாக அறிவித்தார்.

விஷயம் நிஜாமின் காதுக்குப் போனது . அரண்மனைச் சேவகரிடம் நிறையப் பணத்தைக் கொடுத்து செருப்பை ஏலம் எடுக்கப் பணித்தார்.

மாளவியாவுக்கு ஏலத்தில் நிறையப் பணம் கிடைத்தன . வேதனையான நிகழ்வாக இருந்தாலும் அதை சாதனையாக மாற்றிய பெருமை மதன் மோகன மாளவியவுக்குக் கிடைத்தது .

சர்.தாமஸ் ஆல்வா எடிசனை உலகம் மறக்காது . ஏனெனில் எல்லோருக்கும் ஒளி கொடுத்தவர் அல்லவா !

ஆரம்பத்தில் சிறுவன் எடிசன் ஒடும் ரெயிலில் செய்தித்தாட்களை விற்பனை செய்து வந்தார் . ரெயிலின் கடைசிப் பெட்டியில் அடிக்கடி பயணம் செய்வது வழக்கம் .

அப்பெட்டியில் ஒருமுறை தீப்பிடித்துக் கொண்ட து . ரயில் நிலையப் பணியாளர் சிறுவன் எடிசன் தான் இதற்குக் காரணம் என நினைத்தார் . அவரைக் கூப்பிட்டு கன்னத்தில் ஒங்கி அறைந்தார் . செவிப்பறைப் பாதிக்கப்பட்டு கேட்கும் தன்மையை இழந்தார் எடிசன் .

ஆனாலும் தன் ஆராய்ச்சி பணிகளில் கவனத்துடன் செயல்பட்டார்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 1923 தடவைகள் முயற்சி செய்து முடிவில் வெற்றி பெற்றார் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் .

காது கேட்கும் தன்மையை இழந்து விட்ட எடிசன் வாழ்வில் துவண்டு போய் முடங்கிவிடவில்லை .

சாதனைகளைப் படைத்தவர்கள் எல்லாமே வேதனைகளுக்கு உட்பட்டவர்கள் தான் என்பது அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி  ஆகும் .

குரு ராதாகிருஷ்ணன் 

Saturday, 29 October 2011

சோதனைகள் தேவைதான்




ஒவ்வொருவரிடமும் பலம் பலவீனம் இருக்கின்றன . இரண்டையும் பாதுகாத்து வருபவர்களுக்கு இன்பம் கிடைக்கும் .

தங்களின் பலவீனங்களை மற்றவரிடம் தெரியப்படுத்துதல் கூடாது . அதே போல் தான் பலமும் . தன்னால் என்ன செய்ய இயலும் ; செல்வாக்கினால் எவற்றையெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் . இவ்வித நிலைகள் நிறைய விரோதிகள் உருவாக்க வழிகோலும் .

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும் பிறர் மீது நம்பிக்கையை ஒரளவு தான் வைக்க வேண்டும் . அதற்கும் ஒரு எல்லையை வகுத்தல் நல்லது .

பிறர் மீது நம்பிக்கையை வைக்குமுன் சில சோதனைகளைச் செய்ய வேண்டும்  சோதனைகளின் முடிவில் நமக்குத் தெளிவு கிடைக்கும் . அவரின் சில நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .

ரகசியங்கள் பாதுகாக்க தவறியதால் இக்காலத்தில் எல்லா நிலைகளிலும் மோசடிகள் தலைதூக்கி விட்டன .

கேரளாவிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் சிறிய அளவில் உணவு விடுதியை நடத்தி வந்தார்.

மாதச் சாப்பாடு போடுவதால் நிறையப் பேர் அந்த உணவு விடுதியில் பதிவுக் கணக்கை வைத்துக் கொண்டனர் .உணவு , பலகாரங்கள் எல்லாமே அவரது மனைவியின் கைப்பக்குவத்தால் பெயர் பெற்றன . வீட்டுச் சூழல் அவ்விடுதியில் உண்ணுபவர்களுக்குக் கிடைத்து வந்தன .

நண்பரிடம் அடிக்கடி சென்று பேசி விட்டு வருவது வழக்கம் எனக்கு . எங்கள் பேச்சு அரசியல் நாட்டு நடப்புகள் உலகக் கோப்பைக் கால்பந்து என எல்லாவற்றையும் தொட்டுத் திரும்பும் .

கல்லா மேசைக்கருகில் சாப்பிட்ட இளைஞர் பில்லுடன் புன்சிரிப்புக் காட்டி நின்றார் . பில்லைத் தந்தார் . என் நண்பர் கொடுத்த பாக்கிச் சில்லறையைப் பையில் போட்டுக் கொண்டு நடந்து சென்றார் .

நண்பரிடம் நான் கேட்டேன் . எட்டு ரூபாய் ஐம்பது காசு பில்லுக்கு இருபது ரூபாய் பெற்றீர்கள். பதிமூன்று ரூபாய் ஐம்பது காசு திருப்பித் தந்தீர்கள் . வாங்கிய நபரும் பேசாமல் போய்விட்டாரே . பேச்சுவாக்கில் தவறு செய்து விட்டீர்களே ..

நன்றாக அறிந்து தான் கூடுதலாகச் சில்லறையைத் தந்தேன். இங்கு பதிவில் சாப்பிடும் நண்பர் இவருக்கு நாளை முதல் சாப்பாடு போடச் சொன்னார் . பணம் கறாறாகத் தந்துவிடுவார் என்றும் சொன்னார். புதியவரின் நாணயத்தைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்றார் என் நண்பர் .

இரண்டு ரூபாய் சோதனை ஒருவரின் நாணயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது . இந்த நிகழ்வைப் பார்த்த நான் உணவு விடுதி உரிமையாளரின் திறமையை எண்ணி வியந்தேன் .

நம்பிக்கை , நாணயம் , பலம் , பலவீனம் இவைகளை சோதனைகள் தான் தெளிவுபடுத்துகின்றன . இவைகளைக் கட்டி காத்து திறமையாக வாழ்வதில் தான் பெருமைகள் ஒருவருக்கு வந்து சேருகின்றன.


குரு ராதாகிருஷ்ணன் 

Wednesday, 26 October 2011

மன அமைதி வேண்டுமா ...


மன அமைதியை வேண்டாம் என்று கூறுபவர்களை யாரும் பார்த்ததில்லை .

மன அமைதியைத் தேடி மலைச் சாரல்களுக்கும் , நதி தீரங்களுக்கும் போக வேண்டாம் . நாம் இருக்கும் இடத்திலேயே அதைப் பெற முடியும்.
பிரச்சினைகள் தோன்றாத இடம் இல்லை . அலுவலகம் , வீடு , தொழிற்சாலை, பள்ளிக்கூடம், ஆலயங்கள் எல்லா இடங்களும் அதற்குத் தாராளமாக இடங்கள் உண்டு .

பிரச்சினைகளை அணுகி எதிர் கொள்வதில் நிறைய வேறுபாடுகள் உண்டு . விளைவுகள் பூதாகரமாக எழும் போது தான் அதன் தீவிரம் உணரப்படுகிறது .
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி . தீமையும் நன்மையும் பிறர் நமக்குத் தருவதில்லை . இரண்டுக்கும் முழு முதற் காரணம் நாமே என்பதை உணர்ந்து கொள்ளல் அவசியம்

வீடுகளில் பிச்சை எடுத்து உண்டு , பாதையோரங்களில் படுத்துறங்கும் ஒருவனுடைய நிலை
ஏராளமான பணம் , வசதியான வாழ்க்கை எல்லாம் செய்து தரும் ஏவலர்கள் என சகல வசதிகளைக் கொண்ட செல்வந்தரின் நிலை
இவ்விருவருக்கும் மனநிலைகள் வேறுபாடுகள் கொண்டவைகளாகத் தான் இருக்கும்
எந்தச் பிரச்சினையையும் அமைதியாக அணுகுதல் தான் முறை . அரக்கப்பரக்க காரியங்களைச் செய்து விட்டுப் பின் விளைவுகள் விசுவரூபம் எடுக்கும் போது மன அமைதி இல்லை
குட்டக்குட்ட குனிபவனும் நிமிர்ந்து நிற்பான் என்பதை நம்மில் பலர் மறந்து போகிறோம் .
கற்பனைகளை வளர்த்துக் கொண்டு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களில் தன்னை நுழைத்துக் கொள்பவர்கள் உண்டு . கற்பனைகள் மாறாதது என்று கூற முடியாது. மாற்றங்களினால் தோல்வி கண்டதும் துவண்டு போவதுண்டு . இவர்களுக்கு மன அமைதி கிடைப்பது அரிது
எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்க நம்மால் இயலும் என்று யோசனை செய்ய வேண்டும் . முடியாது என்று முடிவுக்கு வந்து விட்டு விடுவது சாலச் சிறந்தது
பிறர் நம்மை மெச்ச வேண்டும் என்ற மாயையால் முடியாத காரியத்தில் நுழைவது சரியல்ல . மன அமைதி இல்லாதவர்களுக்கு இதய நோய் , இரத்தக் கொதிப்பு , சர்க்கரை முதலிய நோய்கள் இணைபிரியாத தோழர்களாக இறுதி வரை உடலை வாட்டும்.
எந்த ஒரு காரியத்தையும் அல்லது பிரச்சினைகளையும் அணுகும் போது நன்றாக ஒரு தடவைக்கும் மேலாக யோசித்துச் செயல்பட வேண்டும் . யோசனை செய்பவர்கள் நிச்சயம் திட்டமிடுபவர்களாகத் திகழ்வார்கள்.
இவர்களிடம் மன அமைதி எப்போதும் நிறைந்து காணும் .

குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 6 August 2011

மாற்றங்கள்


( சங்கு காலாண்டிதழில் வெளியான சிறுகதை ) 


'ரமேஷ்.... இங்க வாப்பா...!'

என்ன கூப்பிட்டேளா....'

'நம்ம.... நிரஞ்சனா நிச்சயார்த்தம் பற்றி எல்லாரிட்ட சொல்லிட்டியோன்னோ.....'

'அவ ஆபீஸ் பிரண்ட்ஸ்.... எனக்குத் தெரிஞ்சவா... நம் உறவுக்காரா சிலருக்கும் சொல்லிட்டேன்.'

'நம்ம ஆத்துல முதல் விசேஷம் இது... வெளியூர்காரா நம்பள சேர்ந்தவா.... எல்லாரையும் கல்யாணத்துக்குப் கூப்பிட்டா போதும்...'

'சரிப்பா....'

' ஏன்னா ...! எப்ப பாருங்க... உங்க அப்பாருக்கு எதையாவது பேசணும்... பதில் வாங்கணும்'

'சாரு.... அவர் அப்படித்தான்... நாம தான் சரி செஞ்சுண்டு  போகணும் .  அவர் கேக்குறதுக்குப் பதில் சொன்னாப் போதும்.  இப்பதான் நோக்கு புரியறதா... முப்பது வருஷமா நீயும் தான் அவரண்ட பேசுற...'

'ஆமா... நா சொல்றச்சே என் வாயை மூடுறேள் எப்படியோ போங்க... நீங்க ஆச்சு... அவராச்சு...'

'வீடு நிறைந்த கூட்டம்.  மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் வந்து விட்டனர்.  கிருஷ்ண அய்யங்கார் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு வீட்டினுள் அலைகிறார். உடம்புக்குத் தானே வயதெல்லாம்.  மனைவி ருக்கு என்கிற ருக்மினி பட்டுப்புடவை மடி சாரில் ஹாலில் அமர்ந்து கணவர், மகன் ரமேஷ், மருமகள் சாருலதா, பேத்தி ரஞ்சனாவையும் கவனிக்கிறார்.

 மாப்பிள்ளை சீனுவாசன் அப்பா ரங்கநாதன் அம்மா அலமேலு மூவரும் வருங்கால மாட்டுப் பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 'ரங்கநாதன்.... எல்லாம் ரெடியாயிடுத்து.... சாஸ்திரிகளும் வந்துட்டார்.  ஆரம்பிக்கலாமா?' 'கிருஷ்ண அய்யங்காரின் குரலில் பெருமிதம்.

 'பேஷா... ஆரம்பிங்கோண்ணா...' சாஸ்திரியிடம் மாட்டுப் பொண்ணுக்கான பட்டுப்புடவை, ஜாக்கெட், பழம், பூ, இத்யாதிகளுடன் தாம்பளத்தில் வைத்து ரங்கநாதன் கொடுத்தார்.  சாஸ்திரிகள் தாம்பளத்தை ரமேஷ், தம்பதிகளிடம் தந்தார், பெற்றுக் கொண்டு திரும்புகையில்...

 'மாமா... சித்த... நில்லுங்கோ...' 'மாப்பிள்ளை கையிலிருந்த பையில் அழகான சிறிய அட்டைப் பெட்டியை புடவையின் மீது வைத்து, சிரிப்புடன் சீனுவாசன் தந்தான்.  ரமேஷீம் வாங்கிக் கொண்டார்.

 அலங்கார பூதிதையாக நிரஞ்சனா மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.  அவள் நிறத்துக்கு ஏற்றவாறு மாப்பிள்ளை வீட்டாரின் மயில் கழுத்து நிறப்புடையில் வரும்போது மயிலொன்று அசைந்தாடி வருவது போல் இருந்தது.
 மனையில் அமர்ந்தாள்.

 மாப்பிள்ளை சீனுவாசன், ரங்கநாதன், அலமேலு மூவரும் நிரஞ்சனாவை இமைகள் சேராது பார்க்கின்றனர்.  பெண் பார்க்க வந்த போது இருந்த நிரஞ்சனா இப்போது கூடுதல் அழகும், வாளிப்பும் இருக்கக் கண்டனர்.

 பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே படிப்பு. எம்.பி.ஏ.இ. தனியார் நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் போது மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.  இருவரும் கைபேசிகள் இல்லாமலேயே பணிபுரிகின்றனர்.  இந்தக் காலத்திலும் இப்படி.  இரு பெற்றோர்களின் வளர்ப்புகள் அப்படி.

 இரு குடும்பங்களிலும் மகிழ்ச்சி தான் குடி கொண்டிருந்தன .  நிச்சயதார்த்தம் முக்கால் மணிக்குள் முடிந்து விட்டது.

 'ரமேஷ் எல்லாரையும் சாப்பிட அழைச்சுண்டு போ... யாருக்கு என்ன தேவையோ... பார்த்துப் பார்த்து செய்யணும்... தெரியறதா...' அப்பாவின் உத்தரவுக்குப் பணிந்தார்.

 அங்கு வந்திருந்தவர், இருவீட்டார், எல்லாரையும் சாப்பாடு கூடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

 மாப்பிள்ளையும்  பெண்ணும் கண்களால் சந்திக்கின்றனர்.  காதில் கைவைத்து செல்போன் நன்றாக இருக்கிறதா என ஜாடையில் கேட்கிறான்.  அவள் ஆட்காட்டி விரலுடன் பெருவிரலை இணைத்து ஓ...கே சொன்னாள்.  கண்கள் பேசும் போதும் வாய் பேச்சுக்கே இடமில்லை என்பார்களே இதுவாகத்தான் இருக்கும் போல.

 நிகழ்வுக்கு வந்தவர்கள் சாப்பிட்ட பின் வழிகேட்டு கலைந்தனர்.  மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் புறப்பட்டனர்.

 கிருஷ்ண அய்யங்கார் ஈசி சேரில் தன் உடம்பைக் கிடத்தினார்.  பக்கத்தில் மனைவி ருக்மினி வந்தமர்ந்தார்.

 'ருக்கு நோக்கு ஞாபகம் இருக்கோண்ணோ... நேக்கு லேசு பாசா தெரியறதுடி... நம்ம நிச்சயார்த்தத்தன்னிக்கு நோக்கு நா ஏதாவது கொடுக்கவும் இல்லடி....'

'இப்போ... அதுக்கு என்ன? அன்னைக்கும் இன்னைக்கும் என்னண்ணா முடிச்சுப்போடுறேள்.. மாப்பிள்ளை பையன் சீனு, நிரஞ்சனாவுக்கு ஏத்த வரன், அது போறும்.'

'பொண்ணுக்குப் புடவையோட செல்போனையும் பொட்டில வெச்சு குடுத்துப் புட்டான்டி நோக்குத் தெரியுமா?....'

'ஆமா... பார்த்தேன்.... அதுக்கென்ன இப்போ?...'

'இதெல்லாம் நேக்கு ஓவர் பில் டப்னு தெரியுறதடி...'

'சரிண்ணா அவர் அவர் இஷ்டம் செஞ்சுட்டுப்போறா....'

'நாற்பது வருஷம் என்னோடு குடும்பம் நடத்தி என்ன பிரயோஜனம்?.... அசடு அசடு இதெல்லாம் நோக்குப் புரியாது டீ. இதைப்பத்தி பின்னால நோக்கு சொல்றேன்...'

 இரவில் நெடுநேரம் நிரஞ்சனா அறையில் விளக்கு எரியும்.  ஒரே சிரிப்பும், பேச்சும் தான்.  செல்போனில் தன் வருங்கால கணவரிடம் பேசுகிறாள்.  பேசிவிட்டுப் போகட்டும் ரமேஷீக்கும் சாருலதாவுக்கும் இது மகிழ்ச்சி தரும் விசயமே.

 ஆபிசில் வேலையின் போது சீனு பேசினான்.  சாயங்காலம் வீட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டான்.  மாமியார், மாமனாரைப் பற்றி சீனுவிடமும் பேசலாமே என நினைத்து வேலை முடிந்ததும் அவன் வீடு சென்றாள்.

நிரஞ்சனா பஸ்ஸில் தான் வேலைக்கு போய் வருகிறாள்.

 முன் நேரத்திலேயே சீனுவாசன் ஆபிசிலிருந்து வீட்டுக்கு வந்து நிரஞ்சனாவின் வருகைக்கு காத்திருந்தான்

 'அம்மா யாரு வர்றானு பாரு...'

' வாம்மா... வா எங்காத்துக்கு நீ வர்றது  முதல் தடவை.  சித்த அங்கேயே நில்லு... ஆரத்தி கொண்டு வர்ரேன் '

நிரஞ்சனாவுக்கு திலகமிட்டு வலது பாதத்தை முன் வைத்து வாசலில் நுழைய அலமேலு கேட்டுக் கொண்டாள்.  வீட்டை கண்களால் அளக்கிறாள்.

சுத்தத்துடன் அழகுடனும் இருந்தது.  அவளுக்குப் பிடித்து விட்டது.
வெளியில் சென்று வந்த ரங்கநாதன் நிரஞ்சனாவைப் பார்த்ததும் மகிழ்ச்சி தோன்ற மனைவியைப் பார்த்தார்.

'அலமு....! மாட்டுப் பொண்ணுக்கு சிரமபரிகாரம் ஏதாவது...'

'ஜலம் கொடுத்துட்டேன், சுவீட்டும், காரமும் ரெண்டு நிமிஷத்துல ரெடி பண்ணிடறேன்...'

கிச்சனை நோக்கிச் சென்ற அலமேலுவின் பின்னாலேயே நிரஞ்சனா சென்று விட்டாள்.  பேசுவதற்கும் கிடைத்த வாய்ப்பு தவறிப்போனதே என நினைக்கிறான் சீனு கிச்சனில் எல்லாமே கேட்டு நிரஞ்சனா திருப்தி அடைந்தாள்.  மனதில் தோன்றிய கேள்விகளுக்கு எல்லாமே விடைகள் பெற்றாள் வருங்கால மாமியாரிடமிருந்து

'மாமி.... நா புறப்படறேன் ஆத்துல தேடுவா....

இன்னொரு நாளைக்கு வர்றேன்... நிறைய பேசலாம்....'

வெளியில் வந்த அலமேலு மகனைப் பார்த்தாள்.

சீனு நம்ம நிரஞ்சனாவைப் பத்திரமா அவ ஆத்துல விட்டுட்டு வா...'

'சரிம்மா....'

டூவிலரில் செல்லும் போது நிறைய பேசினான், அவளிடம்...
தினமும் ஆறு மணிக்குள் வீடு திரும்பும் பேத்திக்காக வாசலில் காத்திருக்கிறார்.

டூவிலரில் வீதி வலம் வந்த இருவரையும் பார்த்தார்.  அதிர்ந்தார் கிருஷ்ண அய்யங்கார் குசல விசாரிப்புகள் முடிந்தன.  தாத்தாவும் இருவரும் வீட்டினுள் சென்றனர்.  சிறிய உபசரிப்புகளுக்குப் பின் சீனு விடை பெற்றுக் கொண்டான்.
 மகன் ரமேஷ் வந்ததும் இது பற்றி கேட்க வேண்டும்.

 நிச்சயதார்ததம் முடிந்ததுமே இப்படித்தான் நடப்பதா? என்ன தான் நாகரீகம் வளர்ந்து விட்டாலும் இப்படியா வரட்டும்...

 அவரின் ஆவேசம் கொழுந்து விட்டு எரிந்தது.

 வேலை முடிந்து களைப்புடன் ரமேஷ் வீட்டினுள் நுழைந்தார்.  மனைவி உபசரிப்புக்குபின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

 கல்யாணம் நடக்கப்போறது... அதுக்குள்ளாற என்ன அவசரம் டூவீலர்ல வீதியில் வலம் வருதுகள் வீட்டுல ஏறக்கிட்டு போறான்.  பொண்ணா லட்சணமா நடக்குறாளா... எங்க காலத்துல இதெல்லாம் கிடையாது... நோக்கு தெரிஞ்சிருக்குமே....

 அப்பாவின் முகத்தைப் பார்த்தார் ரமேஷ் ஆவேசம் அதிகரிப்பால் உடம்பு நடுங்குவதையும் கன்னச்சதைகள், கண்கள் முறையே ஆடுவதும், சிவப்பானதையும் தெரிந்து கொண்டார்.

' இப்போ... என்ன நடந்து  விட்டது...?

 என்ன நடக்கனும்னு நீ விரும்புறே...!

 அப்பா சின்னஞ்சிறுசுக அப்படித்தான் நடக்கும்.  நிறைய படிச்சதுகள் வாழ்க்கையை எப்படி நடத்தனும் என்ற வழி முறைகள் எல்லாமே இன்னைக்கு அவளாளுக்கு அத்துபடி ஆயிடுச்சி... உங்க, என்னோட காலமெல்லாம் வேற... இன்றைய தலைமுறையோட காலமெல்லாம் வேற... நாளாக காலமெல்லாம் மாறிண்டே வருது... நாம தான் அவளாளோட வேகத்துக்கு மாறனும்.... இல்லேன்னா அவா நம்மை விட்டுட்டுப் போயிடுவா... அதனால் எல்லாத்தையும் யோசிச்சு நடந்துக்கனும் அது தான் நமக்கு நல்லதையும் தரும்.

 தனது எண்ணங்களை முழுமையாக அப்பாவிடம் தெரிவித்து விட்ட பெருமிதம் ரமேஷின் முகத்தில் மிளிர்ந்தன.

 ஹாலின் நடுவேயுள்ள கதவுக்குப் பின்னால் நின்று கவனித்த சாருலதாவின் மனதில் கணவனின் பேச்சு கரும்பாக இனித்தது.


குரு. ராதாகிருஷ்ணன்

 சங்கு காலாண்டிதழ் எண். 139.

Tuesday, 5 July 2011

யார் அடிமை


 ( இலக்கியச் சிறகு இதழில் வெளியான சிறுகதை ) 


தாரிணி முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கிறாள். தொழிலதிபர் தாமோதரன், கவிதா தம்பதியரின் ஒரே வாரிசு எது வேண்டுமென்றாலும் நொடிப் பொழுதில் கொண்டு வந்து சேர்க்கும் பணியாட்கள் எங்கு செல்ல நினைத்தாலும் தாரிணிக்கு மட்டும் மகிழுந்து. அதை ஓட்டும் திறமையும் அவளுக்கு உண்டு. அவள் இன்றைய மங்கை.

கல்லூரி வாசலில் அழகாக, ஒயிலாக வந்திறங்கும் அவளுக்கு நிறைய தோழிகள். உடன் வந்த ஓட்டுநர் அதே மகிழுந்தில் வீடு சென்று மதிய உணவுடன் திரும்புவார். மூன்று பேருக்கான அறுசுவை உணவு வகையறாக்கள் வந்திறங்கும். உடனிருந்து அந்த உணவை ருசிக்க தாரிணியின் தோழிகள் முறைபோட்டு செல்வதுண்டு.

 உள்ளுக்குள் தாரிணிக்கு இது கர்வத்தை தந்தது. எல்லா விசயத்திலும் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை அவளது உடை, நடை, பாவனைகள் காட்டின.

அவளது வாய் மூடாத பேச்சு தோழிகளை அசர வைத்து விடும். தமிழ்ப்பாடம் நடத்தும் பேராசிரியை பிருந்தாதான் தமிழ் புலத்தலைவர். அனைத்து சங்க இலக்கியங்கள் தவிர தற்கால இலக்கியங்களையும் மாணவிகளிடம் கொண்டு செல்பவரும் அவரே.

கற்பிதங்களிலும், கற்பித்தலிலும் மென்மை காணலாம். அழகிலும் குறை இல்லை. பெண்களே பெண்ணை (அவளை) காமுறச் செய்யும் அழகு. முதிர்கன்னி, வகுப்பறையில் சில வேளைகளில் மாணவிகளை பாடம் நடத்தச் சொல்லி பார்ப்பவர் பேரா. பிருந்தா. வகுப்பறையில் பட்டிமன்ற நிகழ்வுகளையும் நடத்தச் சொல்லி கவனிப்பதுவும் உண்டு.

பட்டிமன்றத்தின் தலைப்புகள் பெண்ணியம் சார்ந்தவைதான் அதிகமாக அலசப்படும்.
பேரா. பிருந்தா தாரிணியை அவரது அறைக்கு அழைப்பதாக ஏவலர் சொல்ல கணக்கு வகுப்பிலிருந்து அனுப்பப்பட்டாள்.

'தாரிணி – அனைத்து கல்லூரிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடக்க இருக்கிறது – நம் கல்லூரியின் சார்பாக நீ பேச வேண்டும் - உன் பெயரைப் பரிந்துரைத்து கல்லூரி முதல்வருக்கு அனுப்பி விட்டேன்'.

'நன்றி அம்மா ........ என்ன தலைப்பில் பேச வேண்டும்' சொல்லுங்கள்?

உனக்குப் பிடித்த தலைப்பு தான் .... 'ஆணுக்குப் பெண் அடிமையில்லை' ......

'உங்களின் விருப்பம்தான் என் விருப்பம் கலந்து கொள்கிறேன். தலைப்புக்கான குறிப்புக்களை சொல்லுங்களேன்.'

'தாரிணி ... உனக்கு ஏற்ற தலைப்பு தான் .... காந்தி, பாரதி கூறியவைகளைச் சொல்வதோடு, பெண்களை அடிமைப்படுத்தும் போக்கு பற்றி பேசினாலே போதும். கால அவகாசம் இருபது நிமிடங்கள்தான். உறுதியாக ..... உன் பேச்சு சிறப்பாக இருக்கும் ....... வாழ்த்துக்கள்  .....'

'நன்றி ....... அம்மா ....'

'வகுப்பில் ..... நடக்கும் பட்டிமன்றங்களில் உன் பேச்சு நன்றாக இருக்கிறது ..... அதை உத்தேசித்துத்தான் உன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. போட்டி நடைபெறும் இடம், நாள், காலம் எல்லாம் அடுத்த வாரத்தில் அறிவிப்பார்கள். உன் குறிப்புகளை சேகரிக்க நம் கல்லூரி நூலகம் உதவும்...'

விடைபெற்று நடந்தாள். பேட்டி பற்றிய அறிவிப்பு வந்து விட்டது. சுற்றறிக்கை கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. பேச்சுப் போட்டியில் தாரிணி மட்டுமே வெல்லப் போகிறாள் என மாணவிகள் நிறை பேர் பேசிக் கொண்டனர்.   

பச்சையப்பன் கல்லூரி மைய மண்டபம், மெல்லப் பறந்து வரும் வண்ணத்துப் பூச்சிகளை வியப்புடன் நோக்கும் மாணவர் கூட்டம். அவர்களிடையே கூச்சலும், கும்மாளமும் சேர்ந்து கும்மியடிக்கின்றன.

கல்லூரி முதல்வர் ஒலிபெருக்கியில் கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேச்சுப்போட்டியை இடையூறுகள் இன்றி நடத்தித்தர மாணவர்களை கேட்டுக் கொண்டனர்.

அனைத்துக் கல்லூரி பேராசியர்கள், பேராசிரியைகள் மாணவ, மாணவிகள், பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என நிறைய கூட்டம். தாரிணியின் பெற்றோரும் வந்திருந்தனர். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் ஒருங்கிணைத்தார். சற்றொப்ப பத்து கல்லூரிகளில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பேசி முடித்தனர். சில மாணவிகள் தலைப்புக்கு சம்பந்தமின்றி பேசினர்.

ராணிமேரிக் கல்லூரி தமிழ் இலக்கிய முதுகலை மாணவி தாரிணி பேச அழைக்கப்பட்டாள். மேடை ஏறியதும் எல்லோருக்கும் வணக்கம் கூறி பேசினாள்.

'இன்றைய சூழலில் எல்லா மதங்களும் பெண்களை பாவத்தின் பிறப்பிடம் எனும் பார்வையை வரித்துக் கொண்டு அதன் வழி கருத்துக்களை மதவாதிகளும் சொல்கின்றனர். சூது, மது, மாது இம் மூன்றும் மனிதனை மாய்க்கும் பெரும் தீமைகள். இவ்விதமாக விடாமல் சொல்லியே பெண்களை ஆண்கள் அடிமைகளாக நடத்துகின்ற சூழல் உருவாக்கப்பட்டு விட்டன.

அடிப்படை இதே போல உருவாக்கம் ஆனதால் சமய சாத்திரங்கள் இதையே வலியுறுத்துகின்றன. இதன் பரிணாம வளர்ச்சியே பெண்ணைப் பெற்றவர் ஆணிடம் பணத்துக்குத் தாரை வார்க்கும் நிலை ஏற்பட்டது. பெண், பிள்ளைகளைப் பெறும் சாதனமாகவும், அதனால் ஆணின் நிலை உயர்வானதாகச் சிறப்பிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்த வரையில் பெண்ணின் பிறவிநோக்கம் ஆணுக்கு எதிராகப் போரிடுவதும் தான். ஆம், போராடித்தான் எதையும் பெற வேண்டும். சமுதாயம் பெண்களைக் குடும்ப அடிமைகளாகவும், காமப் பொருளாகவும் பயன்படுத்துகிறது. பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு தரப்படவில்லை. ஆகவே ஆண்களிடமிருந்து பிரிந்து வாழும் உரிமையை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலியல் சுதந்திரம், கட்டுப்பாடற்ற விடுதலை என பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அப்போது பெண்களின் மகத்துவம் புரியும். புரட்சிப் பெண்களாகவும் தோன்றுவார்.'

பேச்சை முடித்துக் கொண்டாள் தாரிணி. மாணவிகளின் கையொலிகள் அவளுக்கு நிறையக் கிடைத்தன. அடுத்து பச்சையப்பன் கல்லூரி முதுகலை தமிழ் இலக்கிய மாணவன் அரவிந்தன் அழைக்கப்பட்டான்.

சம்பிரதாயமான வணக்கங்களுடன் பேச்சைத் துவங்கினான் 'காந்தி சொன்னதை இங்கு நினைவுகூர வேண்டும் இறைவன் படைப்பில் அற்புதமான படைப்பு பெண். மென்மையும். மேன்மையும் நிறைந்த படைப்பு உலகில் வேறு எதுவுமில்லை. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பேசுவது பெண்களுக்கு அழகல்ல... அதே போல வீட்டையும், கணவனையும், பெற்றோரையும் உடன் பிறந்தவரையும் கட்டி ஆள்பவள் பெண் என்கிறது ரிக்வேதம், இங்கு மட்டுமல்ல உலகெங்கிலும் பெண் தாழ்வாகவும், ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படை அநீதிக்கெல்லாம் உச்சம், கலியுகத்தின் பிறப்பு, இதை வலியுறுத்தியது நம் மகாகவி பாரதிதாசன்.

பெண்களுக்கு ஜீவன் உண்டு. மனம் உண்டு, புத்தி உண்டு, ஜம்புலன்கள் உண்டு அவர்கள் செத்த யந்திரங்கள் அல்லர். உயிருள்ள செடி, கொடிகளைப் போலவும் அல்லர்.  சாதாரணமாக ஆண் மாதிரியாகவே தான் புறவுறுப்புகளில் தான் மாறுதல். ஆத்மா ஒரே மாதிரி என்றும் சொன்னதும் நம் பாரதிதாசன். ஆணும் பெண்ணும் சம நிலையில் போற்றப்பட வேண்டும் எனும் வாதம் சரியானாலும் இருவரும் இயற்கையின் நியதிப்படி ஒரே தன்மையராக இருக்க வாய்ப்பே இல்லை.

ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்ய இயலும் என்று அடம் பிடிப்பது சரியில்லை. நம் சமூகம் பெண்ணுக்கு எதிராக பல காலமாக நிகழ்த்தி வரும் கொடுமைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று போராடுவதில் தவறு கிடையாது அதே நேரத்தில் பெண், மகளாகத் தோன்றி, மனைவியாக வாழ்ந்து, தாயாகத் தொண்டு செய்து தெய்வமாகக் காட்சி தருபவள் என்று பெண்ணின் பெருமை நூலில் திரு.வி.க. வலியுறுத்துகிறார்.

பெண்ணின் பிறவிநோக்கம் ஆணுக்கு எதிராகப் போராடுவது அல்ல. ஒரு பாதியல் நிற்கும் பெண் மறுபாதி ஆணுடன் இணைந்து வாழ்வில் இன்பத்தைப் பெருக்கி உலகை உய்விப்பதுதான் அவள் நெஞ்சத்தில் நேர்ந்து கொள்ள வேண்டிய நேர்ச்சியாகும். ஆணுடன் இணைந்து பெண் அன்பு செய்தல் வேண்டும்.

பெண் ஆணோடு உரிமை பூண்டு வாழ வகுக்கப்பட்டதுதான் இல்லறம்' நன்றி கூறி பேச்சை முடித்தான் அரவிந்தன். முதற் பரிசும் அவனுக்கே.

அரவிந்தனின் பேச்சு பேராசிரியை பிருந்தாவின் மனதை சலனப்படுத்தியது.

விரைவாக திருமணம் செய்துகொள்ள அவரது மனம் விழைந்தது.
    

குரு. ராதாகிருஷ்ணன்

நன்றி : இலக்கிய சிறகு சிற்றிதழ் 

Tuesday, 28 June 2011

முடிவற்ற சகாப்தம்




சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் பற்றியது ஒரு சிறு சம்பவம் ஒரு மனோநிலை ஆகிய இவற்றை எடுத்து எழுதுவது, சிறுகதையில் முக்கிய சம்பவமோ நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ, அது ஒன்றாக இருக்க வேண்டும்.


    சில சமயங்களில் ஒரோர் சிறுகதை நூறு பக்கங்களுக்கு மேல் போகலாம், உதாரணமாக மேனாட்டில் ஆங்கில சிறுகதைகள் பிரெஞ்சு கதைகளிலும், ருஷ்ய கதைகளிலும் சுருக்கமாக விஷயத்தை புதிய மாதிரியில்  எழுதப்படுகிறது. ஆங்கில நாட்டு கால்ஸ் வொர்த்தி, ஹார்டி, பிரெஞ்சு மொப்பஸான், அன்தோலி பிரான்ஸீ முதலிய சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதை என்ற இலக்கியப் பகுதியை மிகவும் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்கள்.

    சிறுகதை என்பது வாழ்க்கையில் சிறிய சாரளங்கள் .இதற்கும் நாவலுக்கும் வித்தியாசம் நாவல் வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன் கொந்தளிப்புகளுடன் அப்படியே சித்தரிக்க முயலுகிறது. சிறுகதை ஒரு சிறு சம்பவத்தை தனித்த விஷயத்தை எடுத்து ஆளுகிறது என்பது தான்.

    என் கதைகளில் எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு அது பிறந்தவிதத்தை சொல்வது  என்றால் ரிஷி மூலம் நதி மூலம் காணுகிற மாதிரிதான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம் வேறு சில அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு காரியம் கை கூடாது போது எழுதப்பட்டிருக்கலாம்.





    இதனால் சுயமாகக் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறவனுக்கு இன்னதான் இந்த கதையை எழுதத் தூண்டியது என்று சொல்வது எளிதல்ல. கேட்டதால் தோணித்து எழுதினேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    நான் கதை எழுதுவதற்கு நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. இதை நான் ஸ்பஷ்டமாகச் சொல்ல வேண்டியதில்லை. நான் முன் விவரித்த உதாரணங்களே போதும் என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணுறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும்.

    அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்போழுதும் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இவற்றை விவரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள் நான் அப்படியல்ல ஞாபக மறதிக்கு அரிய வசதி அளிப்பேன். அதையும் தப்பி வந்தவைதாம் புதுமைப் பித்தன் கதைகள் என்ற கோவையும் பிறவும் ஆனால் ஒன்று எடுத்து ரூபத்தில் அமையும் வரை மனசில் உறுத்திக் கொண்டு கிடக்கும் நிலையில் இந்தக் கதைகள் யாவும் இவற்றைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை எழுதி முடித்த பிறகு அவைசற்று ஏமாற்றத்தையே அளித்து வந்திருக்கின்றன. ஆனால் ஏமாற்றம் வெகுநேரம் நீடிப்பதில்லை.

    இதுவரை நீங்கள் வாசித்தது அமரர் எழுத்தாளர்  சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன், ' ஊழியன் ' எனும் சஞ்சிகையில் கட்டுரைகளாக எழுதியவற்றில் சிலது மட்டுமே.

    இவ்வாறு தன் மனதில் பட்டதை யாருக்காவும் எதற்காகவும் சொல்லாது விட்டது கிடையாது. வாழ்க்கையில் யாரையும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து முடித்த அப்பெருந்தகையின் 63வது நினைவு தினம் எதிர்வரும் 30.06.2011ல் பிறக்கிறது.

    தமிழ் எழுத்துலகில் தனக்கென ஓரு வகையான நடையும் லாவகமும் கொண்டவர் அமரர் புதுமைப் பித்தன் இவர் எழுதிய கதைகள் ஆகும் என்றும் இவைகள் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளது என ஆய்வறிஞர் திருமிகு. ஆ. இரா.வேங்கடாசலபதி  தெரிவித்துள்ளார்.

    இத்துணை திறமைகளையும்  ஓரு சேரப் பெற்ற அமர எழுத்தாளர் புதுமைப் பித்தனின் வரலாறை அவசியம் அறிந்து கொளல் வேண்டும்.

    கரிசல் இலக்கிய கர்த்தா அமரர் கு. அழகிரிசாமி தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன் ,  பின் ஜெயகாந்தன் ஆகியோருக்கு தமிழ்ச் சிறுகதைகளில் ஈடுபாடும் ஆர்வமும் ஏற்பட புதுமைப் பித்தனே உந்து சக்தியாகியுள்ளார். என்பதை பல பேட்டிகளில் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
    இவர்களில் புதுமைப்பித்தனோடு நட்பு கொண்டு அவரின் அன்புக்குப் பாத்திரமானவர் அமர எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் இவர் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு சிறப்பான ஆவணப்பதிவு அரிய செய்திகள் உள்ளடங்கிய நூல் பொது நூலகங்களில் இப்புத்தகம் கிடைக்கும் வாசிப்பவர்களுக்கு அதிய விருந்து.

    அய்ரோப்பியர் அரசில் தாசில்தாராகப் பணியாற்றி வந்த சொக்கலிங்கம் பிள்ளை பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக திரிப்பாதிரிப்புலியூர் (கடலூர்) பிறந்தவர் புதுமைப் பித்தன்.

    25.04.1906ல் பிறந்த இவருக்கு தங்கை ருக்மணி அம்மா, தம்பி சொ. முத்துசாமி உடன் பிறந்தவர்கள் பர்வதத்தம்மாள் புதுமைப் பித்தனின் எட்டாவது வயதில் இறந்து போனார்.

    தாயாரின் தங்கையான காந்திமதி அம்மாள் அப்பாவின் இரண்டாவது மனைவி ஆனார். சிறுவயதில் தாயன்பு அறியாப்பருவத்தில் தாயின் மரணமும், சிற்றன்னையின் கொடுமைகளையும் அனுபவித்தவர் புதுமைப் பித்தன்.

    அப்பாவின் பணிமாற்றங்கள் தென்னாற்காடு மாவட்டத்திலேயே நடந்ததால் புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வி செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் ஆரம்பமானது.

    தாசில்தார் பணி ஒய்வின் காரணமாக அப்பாவுடன் சொந்த ஊரான நெல்லைக்கு வந்து சேர்ந்தார் புதுமைப்பித்தன் தாமிரபரணி நதிக்கரையில் அமர்ந்துள்ள வண்ணாரப்பேட்டை வாசம் தொடர்ச்சியானது தடங்கலில்லாத கல்வி பு.பி.க்கு கிடைத்தது.

    பள்ளியிறுதி வகுப்பு முடித்து நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ) பட்டம் பெற்றார். ஆனால் இது நடந்தது அவரது இருபத்தைந்து வயதுக்கு மேல் தான்.

    அப்பாவிற்கு மகனை  அரசுப் பணியில் அமர்த்திப் பார்க்கும் விருப்பம் இதனால் தடைப்பட்டு போனது மகனை சட்டம் படிக்க வைத்து வக்கீலாகப் பார்க்க நினைத்தார். ஆனால் புதுமைப் பித்தன் எண்ணமோ வேறாக இருந்தது. தன் விருப்பம் நிறைவேறாமலேயே சொக்கலிங்கம் பிள்ளை மரணமடைந்தார்.
    நிறைய ஆங்கில நாவல்கள் சிறுகதைகள் படிப்பதிலும் நண்பர்களுடன் உரையாடுவதிலும் ஊர் சுற்றி திரிவதிலும் தான் நாட்டம், ஈடுபாடு அதிகமாகிப் போனது.

    பட்டம் பெற்ற ஆண்டிலேயே திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண்ணை மனந்தார். இவரது வாரிசு ஒரே மகள் தினகரி.

    புதுமைப்பித்தனின் முதல் படைப்பு ' குலோப்ஜான் காதல் ' காந்தி இதழில் 1933ல் வெளியானது.






    1934 ஏப்ரலிலிருந்து 'மணிக்கொடி' இதழில் பா. கதைகள் கட்டுரைகள் வெளியிடப்பட்டன அந்த வருடமே சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

    ஒரு வருடம் ஊழியன் பத்திரிகையின் உதவியாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் ஆறு ஆண்டுகள் (1936 – 1943) தினமணியில் உதவி ஆசிரியர் பணி இதழின் ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கம் நிர்வாகத்தினரோடு மோதலினால் பொறுப்பிலிருந்து விலகினார். உதவி ஆசிரியர்களில் சிலரும் வெளியேறினர் அவர்களில் புதுமைப் பித்தனும் அடக்கம். தினசரி பத்திரிக்கையை டி.எஸ் சொக்கலிங்கம் (1944) ஆரம்பித்தார். அவரோடு புதுமைப்பித்தன் சேர்ந்து பணியாற்றினார்.

    பின்னர் அவ்விதழிலிருந்தும் விலகி திரைப்பட துறையில் நுழைந்தார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வையார் காமவல்லி ஆகிய இரு படங்களிலும் பணியாற்றினார்.

    வசனகர்த்தாவான புதுமைப்பித்தன் பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்தை தனது அம்மாவின் நினைவாக ஆரம்பித்தார். முதல் படம் குற்றாலக்குறவஞ்சியை 'வசந்தவல்லி' என பெயர் மாற்றவும் செய்ய நினைத்தார்.

    வீண் பணச்செலவும் கடன் தொல்லையும் சொந்தப்பட தயாரிப்பு முயற்சியின் விளைவாக ஏற்பட்டன.

    எம்.கே தியாகராஜ பாகவதரின் 'ராஜமுக்தி' படத்துக்கு புதுமைப்பித்தன் வசனம் எழுதினார் கை நிறையப் பணம் புழங்கலாயிற்று மனைவியுடன் ஐந்து நடசத்திர ஓட்டலில் தங்கி செலவழித்தார்.
    கதை வசனம் எழுதும் வேலையில் உற்சாகமுடன் ஈடுபடலானார்.

    1947ன் பிற்பகுதியில் 'ராஜமுக்தி' படத் தயாரிப்பு குழு புனாவிற்கு இடம் பெயர்ந்தது படத் தயாரிப்புக்குழுவினருடன் புதுமைப்பித்தனும் புனா சென்றார்.

    மனைவியையும் குழந்தையையும் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி விட்டு பயணப்பட்டார் அங்கிருந்த தன் மனைவிக்கு புதுமைப்பித்தன் கடிதங்கள் எழுதினார்.

    புனாவில் வசதிகள் இல்லாச்சூழல் அதனால் மிகுந்த துன்பங்களுக்கு ஆளானார் புதுமைப்பித்தன்.

    ஏற்கனவே அவருக்கு இருமல் அடிக்கடி உபாதையைக் கொடுப்பது உண்டு சமாளித்தார் ஆனால் அது காசநோயாக உருவானது. சரியான உணவும் போஷாக்கும் கிடைப்பது அரிதாகிப்போனது.

    காசநோய் தீவிரமடைந்தது புனாவிலிருந்து திருவனந்தபுரம் செல்ல எண்ணினார். ஒரு வருட வாழ்க்கையை முடித்து கொண்டு (1948ல்) ஊர் வந்து சேர்ந்தார்.

    நோய்க்கு பணச் செலவு அதிகமானது நண்பர்களிடம் பணம் கேட்டு கடிதங்கள் எழுதினார். பலன் கிடைக்கவில்லை.  இருப்பினும் நம்பிக்கையை விட்டுவிடவில்லை.

    புதுமைப்பித்தன் நண்பர் வைரவியாபாரி திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். அவரது ஒரே மகன் எஸ். சிதம்பரம் புதுமைப்பித்தனின் கதைகளின் தீவிர வாசகனாகிப் பின் அவரைப் போலவே கதைகள் எழுத வேண்டும் என்ற விருப்பத்தால் புதுமைப்பித்தனை சந்திக்கிறார்.

    தனது ஆதர்ச எழுத்தாளரின் நிலை கண்டு பண உதவிகளையும் உடனிருந்து உதவிகளையும் செய்து வந்தார்.

    'சிதம்பரம் ........ பார்......... நாளை எத்தனை மணியாடர்கள் வருதுபார் .......' என்று சொல்லிக் கொண்டு எல்லா நண்பர்களுக்கும் கடிதங்கள் எழுதினார். பதிலும் இல்லை, ........... பணமும் வரவில்லை.

    வறுமை மிஞ்சிய நிலையில் பலவீனம் கொண்ட உடல் காசநோய்க்கு ஈடு கொடுக்கவில்லை சிறுகதை சிற்பியான புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் 30.06.1948ல் இயற்கை எய்தினார்.

    அவர் மறைந்தாலும் விட்டுச்சென்ற நூல்கள் அவரின் புகழை இன்றும் பரப்பிக்கொண்டு வருகின்றன.

    தமிழ் எழுத்துலகில் நிறைய படைப்பாளிகள் வலம் வருகின்றனர். புதுமைப்பித்தனைப் பற்றி அவர்கள் அவசியம் அறிவது மட்டுமின்றி படைப்புகளை முழுமையாகப் படித்து பார்ப்பது அவர்களை மெருகேற்றும்.

    ஆளுமையும் சகாப்தமும் முடிந்து இரண்டு தலைமுறைகளுக்கு மேலாகிறது.

குரு ராதாகிருஷ்ணன்

Tuesday, 3 May 2011

நானும் என் எழுத்தும்


சங்கம் வளர்ந்த 'மதுரை' என்னையும் வளர்த்தது.  பணக்கார மற்றும் ஏழ்மையும் கொண்டிராத நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்.  அப்பா ரயில்வேயில் பெறும் மாத ஊதியம் தான் குடும்ப வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தது. அம்மா குடும்பத் தலைவி.

 பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே நிறைய திரைப் படங்களைப் பார்த்து உடனே நாலுவரி விமர்சனம் எழுதி 'பேசும்படம்'. 'குண்டூசி'. சினிமா கதிர்' போன்ற பத்திரிகைகளில் என் பெயரை அச்சில் பார்த்து மகிழ்ச்சி கொண்ட காலம். 'சினிமா' சினிமா கதிர்' இதழில் நீண்ட திரைப் பட விமர்சனங்கள் ஐம்பதுகளில் வெளி வந்துள்ளன. வெவ்வேறு புனை பெயர்களில்.

ரயில்வேயில் எனக்கும் வேலை கிடைக்கும் என்பது கனவாகிப்போனது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வு தேர்ச்சி பெற்றதும் கல்லூரி செல்லும் விருப்பமும் நிறைவேறவில்லை. வேலையில்லாது வெட்டிப் பொழுது போக்கும் நிலையில் இருந்த எனக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மதுரை மருத்துக் கல்லூரியில் வேலை கிடைத்தது. விடுமுறை நாட்களில் நூலகங்களில் கிடைக்கும் நூல்களைப் படித்தேன்.

 நிறைய புத்தங்களைப் படிக்கப் படிக்க வாசிப்பின் ருசி என்னுள் வளர்ந்தன. பிரபலமான எழுத்தாளர்களின் சிறு கதைகள், புதினங்கள் என தொடர்ந்து படிக்கலானேன்.

இதழ்களில் வெளியாகும் சிறு கதைகள் , தொடர்கதைகளையும் விட்டு வைக்கவில்லை. நானும் சிறு கதைகள் எழுத முயன்றேன். இயலவில்லை. எந்த வகையில் எப்படி எழுதுவது அதுவும் பத்திரிகைளுக்கு ஏற்றவாறு எழுத வேண்டும் என்ற நுணுக்கம்  எனக்குத் தெரியவில்லை.

 மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி வீதியில் கந்தசாமி  புலவர் நடத்தி வந்த 'திருக்குறள் கழகம்' பெயர் பெற்ற இலக்கிய மன்றமாகத் திகழ்ந்தது. தினமும் மாலை ஆறு மணிக்கு துவங்கும் இலக்கிய பொழிவு இரவு எட்டரை மணி  அளவில் நிறைவடையும்.







 பேராசிரியர்கள் இராசமாணிக்கனார். அ.கி. பரந்தாமனார், ஒளவை சு. துரைசாமி பிள்ளை, இலக்குவனார், பொறியாளர் அ. மணவாளன் ஆகியோர்   தமிழ்ச் சங்க இலக்கியங்கள், திருக்குறள் பற்றிய பொழிவுகளை நிகழ்த்துவர். செக்நாட்டு தமிழறிஞர் கபில் சுவலபெல் அவர்களும் பொழிவை செய்துள்ளார். இவைகள் எனக்கு இலக்கியத்தில் வழியமைத்தன.

 இவர்கள் பொழிவுகளைக் கேட்டதின் மூலம் எனக்கு தமிழ் இலக்கியங்களின் மீதான பற்று அதிகமானது. சென்னை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று மதுரை தொழில் வணிகத்துறையில் பணியமர்ந்தேன். தொழில்  வணிகத்துறை அலுவலர்களுக்கு மாநிலம் முழுவதும் பணி முன்னுரிமைப் பட்டியல் தயாரிப்பதுண்டு. அது போல பணி இட மாற்றமும். எல்லா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதும் உண்டு. எந்த ஊரிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

அவ்வாறான நிலையில் நான் பணியின் நிமித்தம் மதுரை. திருச்சி, தஞ்சை, அரக்கோணம், மீண்டும் திருச்சி, பின் கோவை என மாற்றங்கள் கிடைத்தன . இம்மாற்றங்கள் ஒரு வகையில் எனக்குப் படைப்பாளி என்ற கௌரவத்தை அனுபவங்கள் மூலம் அள்ளிக் கொடுத்தன. எந்த ஊருக்குச் சென்றாலும் இலக்கிய அமைப்புகள், இலக்கிய ஆர்வலர்களைத் தேடிச் செல்லும் வழக்கம் எனக்கு உண்டு.

 தஞ்சாவூரில்தான் என் படைப்புகளுக்கு 'பிள்ளையார் சுழி' போடப்பட்டது.  தஞ்சையில் 'பெசன்ட் ஹால்' இயங்கி வந்தது. தமிழக மறைந்த   அரசியல் தலைவர்களுக்கு நினைவரங்கம் அங்கு ஒரு நாளில் நடந்தது. பார்வையாளனாக அக்கூட்டத்துக்குச் சென்றேன். அமரர்கள் காமராஜ், ராஜாஜி , ஜீவானந்தம் போன்றவர்களைப் பற்றி பலர் பேசினார்கள்.

 தஞ்சை நகர சுதந்திரா கட்சியின் நிர்வாகியும், தொழில் அதிபருமான திரு.  நாராயணன் (ராஜாஜி அவர்களின் கருத்துக்களை) சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவைகளைச் சுருக்கி ஒரு இன்லண்ட் லெட்டாரில் 'நாற்காலியைத் தேடி அலையாதீர்கள்' எனும் தலைப்பில்
 துணுக்காக எழுதி கல்கி, குமுதம் இதழ்களுக்கு அனுப்பினேன். குமுதம் போடவில்லை. கல்கியில் வெளியாகி (1971) பதினோரு ரூபாய்  சன்மானமும் கிடைத்தது. முதலில் கிடைத்த பத்திரிகை சன்மானம்.

 அப்போது பிரபல எழுத்தாளரும், இதழாளருமான அமரர் அரு. ராமநாதன் 'காதல்' எனும் தமிழ் மாத இதழ் நடத்தி வந்தார். அவர் 'வீரபாண்டியன் மனைவி' எனும் வரலாற்றுப் புதினத் தொடரை 'காதல்' இதழில் வெளியிட்டார்.

ஆழகான நடையில் அழகாகக் கொண்டு சென்ற அத்தொடருக்கு லட்சோபலட்ச வாசகப் பெருமக்கள் கிடைத்தனர். அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைந்தேன்.

 'வாக்குமூலம் எனும்' தலைப்பில் வரதட்சிணைக் கொடுமை பற்றிய சிறுகதை ஒன்றை எழுதி 'காதல்' இதழக்கு அனுப்பி வைத்தேன். பிரசுரமானது. மீண்டும் 'காவிரிப் பரிசல்' எனும் தலைப்பில் மற்றுமொரு சிறு கதையை அனுப்பி  வைத்தேன்.

அடுத்த  மாதமே 'வசந்த மலர்' இதழில் வெயிளானது. மலர்  எழுத்தாளான் எனும் பெயரும் கிடைத்தது. இக்கதைக்கு சன்மானங்கள் கிடைக்காவிட்டாலும் என் படைப்புக்கு கிடைத்த அங்கீராம் என்பதை இன்றும் நினைவு கூற  முடிகிறது.

இவ்வாறு 'காதலில்' தான் என் படைப்புகள் அரங்கேறின.        பிரபல எழுத்தாளர் அமரர் நா. பார்த்தசாரதியின் 'தீபம்' இதழ் அலுவலகம், நான் சென்னை செல்லும் போதெல்லாம் தங்குமிடமாகிப்போனது.  அவரது அன்பை முன்னமேயே மதுரையில் பெற்றவன் நான்.

 அலுவலகத்தில் பணியாற்றி வந்த, நா.பா.வின் உறவினருமான திருமலை எனக்கு நண்பர் ஆனார்.  இவரது நட்பு கடந்த முப்பத்து ஆறு வருடங்களாக நீடித்து வருவது என் பேறுகளில் ஒன்று.  சென்னை செல்லும் பொழுது எண்ணற்ற புத்தகங்களைக் கொடுப்பார். 'தீபம்' இதழுக்கு அவைகளின் விமர்சனத்தை எழுதச் சொல்வார்.  நிறைய புத்தக விமர்சனங்கள் 'தீபம்' இலக்கிய இதழில் எழுதியிருக்கிறேன்.  சிறுகதை ஒன்றும் தீபத்தில் வெளியாகியுள்ளது.

 தோழர் கே.சி.எஸ். அருணாசலம் ஆசிரியராகப் பொறுப்பேற்று 'தாமரை' இதழ் வெளியானது.                                    ' வெளிப்பாடுகள், 'சாதுரியம்' எனும் தலைப்புகளில் இரண்டு சிறுகதைகள் 'தாமரை' இதழ்களில் வெளிவந்தன.  தஞ்சையிலிருந்து மீண்டும் திருச்சிக்கு பணி மாற்றம் கிடைத்தது.

 ஆனந்த விகடனின் 'பொன்விழா' கொண்டாட்ட காலம் அது.  விகடன் விமர்சனக்குழுவில் இடம் பெற்ற வெளியூர் வாசகர்களில் திருச்சியில் நான்  தேர்வாகினேன் .  அமரர்  சின்ன அண்ணாமலை தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த 'தர்மராஜா' திரைப்படத்தை விமர்சிக்க வாய்ப்பும், பரிசும் கிடைத்தன.  பத்தரிகை பரிசு என்பது விகடன் மூலம் எனக்கு கிடைத்தது.  எனக்கு பெருமை தரும் விசயமாகும்.

 திருச்சியில் 'துடிப்பு' எனும் இலக்கிய அமைப்பை பிரபல எழுத்தாளர் ம.நா.ராமசாமி, மருத்துவர்கள் இரா.கலைக்கோவன், திருச்சி வானொலியைச் சேர்ந்த திருவாளர்கள் இளசை சுந்தரம், தே.சந்திரன், நெல்லை ந.முருகன்; (சேயோன்) ஆகியோர் துவக்கினார்.  இவர்களோடு என்னையும் இணைத்துக் கொண்டேன். 'துடிப்பு' இலக்கிய அமைப்புக் கூட்டங்களில் நானும் அடிக்கடி பொழிவுகள் செய்வதுண்டு.  என் தமிழ் ஆர்வத்தை கண்ணுற்ற வானொலி நண்பர்களின் மூலம் சிறுவர் நிகழ்ச்சி, இலக்கிய கலந்துரையாடல், நூல் விமர்சனம், பிரபல எழுத்தாளர்களைப் பேட்டி காண்பது ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்ற வாய்ப்புகள் கிடைத்தன.

 மும்பையிலிருந்து 'சீர்வரிசை' எனும் தமிழ் இலக்கிய மாத இதழ் வெளிவந்தது.  நெல்லைச் சீமையைச் சேர்ந்த இரா.மா.சண்முகராஜன் இதழின் ஆசிரியர்.  தரமான  இதழ், தமிழ்நாட்டில் பரவலமாகப் படிக்கப்பட்ட இதழும் கூட, இவர் எனக்கு கடிதம் எழுதினார்.  தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர்களை பேட்டி கண்டு எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார்.

 அரசு ஊழியம் செய்யும் எனக்கு இது சாத்தியப்படாது என எழுதினேன். மாற்றாக ஒரு வழியையும் பதிலில் எழுதினேன்.  பேரறிஞர் மு.வ. அவர்களைப் பற்றி நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதி மாதிரிக்காக அனுப்பி வைத்தேன்.  தமிழால்  பெயர் பெற்றவர், அணி செய்தவர்கள் பெருமைசேர்த்தவர்கள், வாழ்ந்த பேரறிஞர்கள், பெருமக்களைப் பற்றி எழுதுகிறேன். சம்மத அளிக்க வேண்டினேன்.  ஓப்புதல் தந்தார்.  சற்றொப்ப முப்பத்திரண்டு கட்டுரைகளை எழுதி சீர்வரிசை இதழுக்கு அனுப்பி வைத்தேன் இரண்டு வருடங்களுக்கு மேலாகவே கட்டுரைகள் இதழ்களில் பிரசுரமாயின.

 தினமணி கதிர், தினமணி சுடர், கணையாழி, புதிய பார்வை, படித்துறை போன்ற இதழ்களில் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் இலக்கியச் சிற்றிதழ்களான 'இலக்கியச் சிறகு', புதிய கோடங்கியில் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

விமர்சனக் கட்டுரைகளைப் படித்த என் நண்பர்களில் பலர் நூல் விமர்சனங்களைத் தொடர்ந்து எழுத என்னை வற்புறுத்தினர். கட்டுரைகளும் நண்பர்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தின. 'புதிய பார்வை' இதழில் என் கட்டுரையை எழுத்தாளர் இதழாளருமான திரு.மணா  அவர்கள் (இலக்கிய சிறகில் வந்தது) பாராட்டியதை என்னால் மறக்க இயலவில்லை இன்றும்.






 புதுடெல்லியிலிருந்து தமிழர்களுக்காக 'வடக்கு வாசல்' எனும் மாத இதழ் வெளி வருகிறது. இதன் ஆசிரியர் யதார்த்தா கி.பென்னேஸ்வரன், சிறந்த நாடக ஆசிரியர், தமிழ்ப் புலவரும் கூட. நடுவணரசின் தலைமைச் செயலகத்தில் பெரிய பதவியில் இருந்தவர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர். தமிழ்ப் பற்றின் காரணமாக பெரும் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வந்த பணத்தில் 'வடக்குவாசல்' இதழை ஆரம்பித்தவர்.

 'வடக்கு வாசல்' இதழ்களில் என் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயமாகும்.

 'தீபம்' இதழ் நடத்திய அமரர் நா.பா.அவர்களுக்கு நிறைய படைப்பாளிகள், தமிழ் ஆர்வலர்கள், பிரமுகர்கள் நட்பால் அவரோடு குடும்ப உறுப்பினரானார்கள்.

 'தீபம்' இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்களாக குறிஞ்சி வேலன், கவிஞர் சேவற்கொடியோன், எஸ்.திருமலை, திருப்பூர் கிருஷ்ணன், மதுசூதனன், கண்ணன் மகேஷ், நானும், திகழ்ந்தோம்.
நிறையைப் பேர்களை பட்டியலிடலாம்தான். பக்க நீட்டிப்புகளை நினைத்து இத்துடன் நிறுத்துகிறேன்.

 குறிஞ்சிப்பாடியிலிருந்து நண்பர் திரு.குறிஞ்சி வேலன் 'திசை எட்டும்' எனும் மொழிபெயர்ப்பு காலாண்டு இதழை நடத்தி வருகிறார். நல்ல தரமான இதழ். இதழின் விலை கூடுதலாகிப் போனாலும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய காலாண்டு இதழ். தமிழ்ப்  படைப்பாளிகள்
அனைவரிடமும் இருக்க வேண்டிய இதிகாசப் புத்தகம்.

 'திசை எட்டும்' இதழ்களில் நிறைய நூல் விமர்சனங்கள் செய்துள்ளேன். இதழ் வாசகர்களிடம் , இவைகள் நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியதை அவர்களின் கடிதங்களே சாட்சியங்களாகின.

 சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சிற்றிதழ் 'புதுகைத் தென்றல்' இதழாசிரியர் திரு.மா.தருமராஜன் பாரத ஸ்டேட் வங்கியில் மேல் நிலை அலுவலராகப் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். தமிழின் மீதான பற்று இதழ் நடத்த முடிகிறது. புதுகைத் தென்றல் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

 கரிசல்காடு இலக்கியத்தின் முன்னோடியானவரும், மூத்த எழுத்தாளருமான கி.ரா என அன்புடன் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்களால் நிறுவப்பட்ட இதழ் 'கதை சொல்லி' நாடோடி இலக்கியத்துக்கு இதழின் பங்களிப்பு நிறைய உண்டு. எழுத்தாளர் கழனியூரன் பொறுப்பேற்று நடத்திய 'கதை சொல்லி' தற்போது சென்னை வழக்கறிஞரும், அரசியல் பிரமுகருமான திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 'கதை சொல்லி' இதழின் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தி வருகிறார். காலாண்டு இலக்கிய தமிழ் இதழான 'கதை சொல்லியில் என் சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 படைப்பாளிகள் சந்தித்து உரையாடும் போது எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களைப் பற்றி கேள்விகள் எழும். பதில்  சொல்ல என்னால் இயலாது. படைப்புகள்  எல்லாம் தொகுத்து புத்தகங்களாக்கி வெளியிட வேண்டும். நிறைய புத்தகங்கள் போடலாமே என்ற எண்ணம், விருப்பமும், எண்ணமும் முப்பத்தேழு வருட அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றதும்தான் நிறைவேறின எனலாம். எதற்கும்  வேளை வர வேண்டும் என்பார்களே அது நிஜம்தான்.

 திரைப்பட நடிகர், நடிகைகளின் பேட்டிகள் புற்றீசல்கள் போல் பறந்து வரும் கால கட்டத்தில் இலக்கியத் தரமான பேட்டிகள் வர வேண்டும் எனும் நினைப்பு எழுந்தது.

ஏற்கனவே நான் திருவாளர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சி.சாமுவேல் எட்வர்டு, தெய்வசிகாமணி, நாஞ்சில் நாடன், புவியரசு, இரா.கலைக்கோவன், குழ.கதிரேசன், செல்வ சுந்தரம் ஆகியோரைப் பேட்டி கண்டு பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இப்பேட்டிகளைத் தொகுத்து சிறப்பு நேர்காணல் எனும் தலைப்பில் புத்தகமாக்கி சென்னை ஐந்திணைப் பதிப்பகம் மூலம் 1996-ல் வெளியிடப்பட்டது.

 ஏற்கனவே 'சீர்வரிசை' இதழ்களில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து 'மறக்க முடியாதவர்கள்' எனும் தலைப்பில் சென்னை ஐந்திணைப் பதிப்பகத்தின் மூலம் 1997-ல் வெளியானது. இதே நூல் இரண்டாம் பதிப்பாக சென்னை வள்ளி சுந்தர் பதிப்பகத்தின் மூலம் 2006-ல் வெளியானது. இரண்டு பதிப்புகளாக வெளியான இந்நூல் தமிழ் வாசகர்களிடம் பரவலாகப் போய்ச் சேர்ந்தன.

' 1998-ல் 'நன்னெறிக் கதைகள்' எனும் தலைப்பில் பெரிய புராணத்திலிருந்து சிறுவர்களுக்கென 23 கதைகளை நூலாக்கி சென்னை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டது.

 தன்முனைப்பு நூலான 'ஊருக்கு நல்லது சொல்வேன்' எனும் புத்தகம் ஐந்திணைப் பதிப்பகம் மூலம் 1999-ல் வெளியானது. இதுவும் முதற் பதிப்பு விற்பனையாகி இரண்டாம் பதிப்பு 2005-ல் வெளியிடப்பட்டது. சென்னை ஐந்திணைப் பதிப்பகமே வெளியிட்டது மகிழ்ச்சி தரும் விசயமாகும்.

 இந்தியா மற்றும் உலக அளவில் அறிவியல், கணிதம், ஓவியம், குழந்தை இலக்கியம், திரைப்படம், தத்துவம், கடற் பயணம், இலக்கியம், சமூகம் மற்றும் தேச சேவை, ஆகிய துறைகளில் சாதனைகளைச் செய்தவர்களில் நான் அதி முக்கியத்துவம் பெற்ற நூற்றியோரு அறிஞர்களைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கை குறிப்புக்களைக் கொண்ட புத்தகம், 'சிந்தித்தனர், சாதித்தனர்'. சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம் 2000-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2001-ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்க விசயம். மேலும் இது 'பொது அறிவு' களஞ்சியம் எனப் பாராட்டப்பட்டு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்கள் கேட்டுக் கேட்டு வாங்கிப் போன புத்தகம். 'குங்குமம்' இதழ் சிறப்பாக இது பற்றி எழுதியதை மறக்க முடியாது.

 என்னால் எழுதப்பட்ட சிறு கதைகள், கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை தொகுத்து 'கலவை' எனும் தலைப்பில் 2005-ஆம் ஆண்டில் சென்னை ராஜம் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது. இந்த நூலுக்கு அமரர் வல்லிக்கண்ணன் அருமையான அணிந்துரையை மறைவுக்கு முன்பு எழுதியுள்ளார். அணிந்துரையைப் படித்து விட்டு பதிப்பாளர் கொண்ட மகிழ்ச்சி இன்றும் நினைவில் உள்ளது. 'இலக்கிய பீடம்' இதழில் இந்த நூலுக்கு நல்ல திறனாய்வு வெளியானது. 'துக்ளக்' இதழிலும் இந்நூல் சிலாகித்து எழுதப்பட்டது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி தந்தது.

 இதுவரை நான் எழுதி பிரசுரமான கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் அனைத்தையும் தொகுத்து குறிஞ்சிப்பாடி அலமு பதிப்பகம் 2008-ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டது. நூல் தலைப்பு 'விமர்சனங்களும், கட்டுரைகளும்' நான் விமர்சனம் செய்த நூல்கள் அநேகம்.

நூல் விமர்சனத்துக்கென அனுப்பப்படும் புத்தகங்கள்தான் சன்மானமாகும். தவிர  புத்தகக் கண்காட்சிகள், புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் ஒருசேர அமைந்தால் 'வீட்டு நூலகம்' அமைக்க என்னால் முடிந்தது. அதுவும் வாசிப்பின் மேன்மையை உணர்ந்தவர்கள் தான் இதை ஒத்துக்கொள்வர்.

 புதிதாக வீடு கட்டும்போது பலர், தூங்க, உடுக்க, சமைக்க, மல ஜலம் கழிக்க குளிக்க அறைகளை அமைக்கிறோம். ஆனால் புத்தக வாசிப்புக்கும், புத்தகங்கள் சேகரித்து வைக்கவும் அறை மட்டும் கட்ட விரும்புவது இல்லை. புத்தக வாசிப்பின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதற்கு நிச்சயம் முனைவார்கள்.

 அரேபியக் கவிஞன் ஒருவன் 'புத்தகம் என்பது உன் சட்டைப் பையில் இருக்கும் பூந்தோட்டம்' என்று உலகுக்குச் சொன்னான். இது நிஜம் என்பதை என் வாழ்க்கையில் கண்டு உணர்ந்து விட்டேன். நீங்களும் முயற்சியுங்கள். 


குரு ராதாகிருஷ்ணன் 

( சென்னை மணிவாசகர் நூலகம் வெளியிட்ட தொகுப்பிலிருந்து  ... )